UPDATED : ஜன 02, 2024 06:13 PM
ADDED : ஜன 02, 2024 12:51 PM

சென்னை: சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஷெனாய் நகர் உள்ளிட்ட இடங்களில் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடக்கிறது.
சிவில் கான்ட்ராக்டர் ஆபீஸ்
நாமக்கல்லை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 74. இவர், 'சத்தியமூர்த்தி அண்ட் கோ' என்ற பெயரில், சிவில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். நாமக்கல் முல்லை நகரில், இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம், உரிமையாளரின் வீடு அமைந்துள்ளது. நாமக்கல், சென்னை, கோவை, நீலகிரி உள்ளிட்ட இடங்களில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை, வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறைகளில், டெண்டர் மூலம் ஒப்பந்தம் பெற்று கட்டடங்களை கட்டி வருகின்றனர். சென்னையிலும், இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு அலுவலகம், வீடுகள் உள்ளன.
இந்நிலையில், காலை, 11:00 மணிக்கு, நாமக்கல் மற்றும் சென்னையில் உள்ள சத்தியமூர்த்திக்கு சொந்தமான, பத்துக்கும் மேற்பட்ட அலுவலகம், வீடுகளில், திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு, துப்பாக்கி ஏந்திய, மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில், சொத்து ஆவணங்கள், கணக்கு நோட்டு, டைரி, லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களை அதிகாரிகள் கைப்பற்றி, நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவில் கான்ட்ராக்டர் வீட்டில் நடக்கும் வருமான வரித்துறை சோதனையால், தொழிலதிபர்கள் இடையே பீதி ஏற்பட்டு உள்ளது.
ஈரோட்டில்
ஈரோடு, பெரியார் நகரில், பி.வி.இன்ப்ரா ப்ராஜெக்ட்ஸ் கட்டுமான நிறுவனம் செயல்படுகிறது. இங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ஆறு பேர், திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதே போல் ஈரோடு, கருப்பணன் வீதி, ராஜா காட்டில் சி.எம்.கே., ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் கட்டுமான நிறுவன அலுவலகம், பார்க் சாலையில் உள்ள நிறுவனத்திலும், இந்நிறுவன உரிமையாளர் குழந்தைசாமியின் வீட்டிலும், வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். ஈரோடு, ரகுபதிநாயக்கன் பாளையத்தில், ஆர்.பி.பி.கன்ஸ்டிரக்ஷன் உரிமையாளர் செல்வ சுந்தரம் வீட்டிலும் சோதனை நடந்தது. சோதனையின் போது பாதுகாப்பு பணிக்கு, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் ஈடுபட்டனர். கோவை, ஈரோடு பகுதி வருமான வரித்துறை அதிகாரிகள், இந்த சோதனையில் ஈடுபட்டனர். மதியம் தொடங்கிய சோதனை, மாலைக்கு மேலும் நீடித்தது.
கோவையிலும் பல்வேறு இடங்களில் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.

