சார் பதிவாளர் ஆபீஸ்களில் லஞ்ச ஒழிப்பு வேட்டை; ஒரே நேரத்தில் தொடங்கியது விஜிலன்ஸ் போலீஸ்!
சார் பதிவாளர் ஆபீஸ்களில் லஞ்ச ஒழிப்பு வேட்டை; ஒரே நேரத்தில் தொடங்கியது விஜிலன்ஸ் போலீஸ்!
ADDED : அக் 23, 2024 08:14 PM

சென்னை: தமிழகம் முழுவதும் வெவ்வேறு சார் பதிவாளர் அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில், கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவு, வில்லங்க சான்றிதழ், திருமணப் பதிவு உள்ளிட்ட பல்வேறு பதிவு சார்ந்த பணிகள் சார் பதிவாளர் அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பதிவுகளுக்காக அதிகாரிகள் லஞ்சம் பெறுவது கண்கூடு.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அதிகாரிகள் லஞ்ச வேட்டை எக்கச்சக்கமாகி விட்டதாக புகார்கள் கிளம்பின. அதனடிப்படையில், தமிழகம் முழுதும் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று திடீரென ரெய்டு நடத்தி வருகின்றனர்.
சென்னை, கோவை, திருப்பூர், தருமபுரி, நெல்லை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, தர்மபுரி மாவட்டம் அரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சார் பதிவாளர் முருகன் என்பவரிடம் இருந்து ரூ.70,000 ரொக்கமும், அரியலூரில் இரும்புலிகுறிச்சி சார் பதிவாளர் முகமது இக்பாலிடம் கணக்கில் வராத ரூ.5,000 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து கட்டு கட்டாக ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும், சோதனை முடிந்த பிறகே, கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் ஆவணங்கள் குறித்த விபரம் தெரிய வரும்.