பொள்ளாச்சி - பெங்களூருக்கு ரயில்; பயணியர் நலச்சங்கம் வலியுறுத்தல்
பொள்ளாச்சி - பெங்களூருக்கு ரயில்; பயணியர் நலச்சங்கம் வலியுறுத்தல்
ADDED : அக் 02, 2025 01:21 AM

பொள்ளாச்சி: 'பொள்ளாச்சியில் இருந்து பெங்களூருக்கு, உதய் எக்ஸ்பிரஸ் டபுள் டக்கர் ரயிலை இயக்க வேண்டும்,' என, பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர், தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வலியுறுத்தினர்.
பாலக்காடு - திண்டுக்கல் அகல ரயில்பாதையாக மாற்றப்பட்ட பின், குறைந்த ரயில்களே இயக்கப்படுகின்றன. அதில், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி பகுதிகளிலிருந்து பெங்களூருக்கு நேரடி ரயில் சேவை இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, கோவை - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை (22666/22665) கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
பாலக்காடு கோட்ட ரயில்வே அதிகாரிகள், உதய் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க தொழில்நுட்பம் குறித்து ஆராய்ந்து சென்றனர். விரைவில் இந்த ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதுபோன்று மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட ரயில்களும் இயக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தின் மாதாந்திர கூட்டம், தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர், தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
மீட்டர் கேஜ் காலத்தில், பொள்ளாச்சி வழியாக இயக்கப்பட்ட கோவை - ராமேஸ்வரம் தினசரி இரவு நேர ரயிலை மீண்டும் பொள்ளாச்சி வழியாக கோவை அல்லது ஈரோட்டில் இருந்து இயக்க வேண்டும். கோவை - பெங்களூரு உதய் டபுள் டக்கர் ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்.
எர்ணாகுளம் -- பாலக்காடு மெமு பயணியர் ரயிலை 'ஆனைமலை ரோடு' நிறுத்தத்துடன், பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு, ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக சென்னைக்கு இரவு நேர தினசரி ரயில் இயக்க வேண்டும்.
பொள்ளாச்சி - கோவை இடையே காலையில் இயக்கப்படும் ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி கோவைக்கு காலை, 8:40 மணிக்குள் செல்லும் படி மாற்றி அமைக்க வேண்டும்.
இவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ரயில்வே பொது மேலாளர், பாலக்காடு மற்றும் சேலம் கோட்ட மேலாளர்களுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.