தெலுங்கானாவில் ரயில்வே தேர்வு; தமிழக இளைஞர்கள் மனஉளைச்சல்
தெலுங்கானாவில் ரயில்வே தேர்வு; தமிழக இளைஞர்கள் மனஉளைச்சல்
ADDED : மார் 16, 2025 06:19 AM

மதுரை: ரயில்வே தேர்வில் 80 சதவீத தமிழக தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது தேர்வர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
கடந்தாண்டு ஜனவரியில் உதவி லோக்கோ பைலட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தெற்கு ரயில்வேயில் தமிழகத்திற்கு சென்னை தேர்வு வாரியம் மூலமும், கேரளத்திற்கு திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலமும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. சென்னை வாரியத்தில் 493 உட்பட நாடு முழுதும் 18,799 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
முதல்நிலைத்தேர்வு கடந்த நவ., 26 முதல் 29 வரை நடந்தது. பிப். 26ல் முடிவுகள் வெளியாகின. சென்னை வாரியத்தில் 6,315 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான 2ம் நிலைத் தேர்வு மார்ச் 19, 20ல் நடக்கவுள்ளது. ஹால் டிக்கெட் நேற்று வெளியானது. இந்நிலையில் தமிழக தேர்வர்களில் 80 சதவீதம் பேருக்கு தெலுங்கானா மாநிலத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வுக்கான தயாரிப்பில் சுணக்கம் ஏற்படுவதுடன் தேவையற்ற மன அழுத்தமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அவர்கள் கூறியதாவது: சென்னை வாரியத்தில் 6315 பேர் தேர்வான நிலையில் தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்காதது கவலையளிக்கிறது. இது மாணவர்களை நியாயமற்ற முறையில் வடிகட்டுவதற்கான வழி. எங்கள் எதிர்காலம் இத்தேர்வில் அடங்கியுள்ளது. தொலைதுார மையங்களை ஒதுக்குவதன் மூலம் மன உளைச்சலுக்கு ரயில்வே வாரியம் ஆளாக்கி உள்ளது என்றனர்.