இரட்டை ரயில் பாதை திட்டம்: ரயில்வே அதிகாரிகள் ஆய்வு
இரட்டை ரயில் பாதை திட்டம்: ரயில்வே அதிகாரிகள் ஆய்வு
UPDATED : அக் 15, 2026 06:19 PM
ADDED : அக் 15, 2026 05:55 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஆடுறை முதல் சுந்தரப்பெருமாள் கோவில் வரையிலான, இரட்டை ரயில் பாதை திட்ட பணிகளை நேற்று தென்னக ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர் – விழுப்புரம் வரை ரயில் போக்குவரத்து நெரிசல், சிக்னல், தண்டவாளம் பராமரிப்பு உள்ளிட்ட பிரச்னையால், ஒற்றை ரயில் பாதையை, இரட்டை ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மத்திய ரயில்வே துறை, முதற்கட்டமாக, தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் இருந்து சுந்தரப்பெருமாள்கோவில் வரையிலான 21.50 கி.மீ., துாரத்துக்கு முதற்கட்டமாக இரட்டை ரயில்பாதை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, இரட்டை ரயில் பாதை திட்டத்தின் கட்டடப் பணிகளுக்காக, 208.48 கோடி ரூபாயும், சிக்னல் உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்கள், உள்கட்டமைப்புகளுக்காக 47.90 கோடி ரூபாயும், மின்சாதனங்கள் உள்ளிட்டவைக்கு 32.79 கோடி ரூபாயும் என 289.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து, நேற்று தென்னக ரயில்வே முதன்மை நிர்வாக அலுவலர் சுஷில்குமார் மவுரியா தலைமையில், முதன்மை பொறியாளர் ஹரிபாபு, உதவி முதன்மை பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர், இரட்டை ரயில் பாதை அமைப்புக்கான பணிகளை ஆய்வு செய்தனர்.
மேலும், வரும் 2028ல் மகாமகம் விழா வருவதால், பயணியரின் வசதிக்காக, சுவாமிமலை, தாராசுரம், கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில், நடைபெறும் பணிகளையும் ஆய்வு செய்தனர்.
