ரயில்வே 'ரிசர்வேஷன் சார்ட்' தானியங்கி முறையில் அமல்
ரயில்வே 'ரிசர்வேஷன் சார்ட்' தானியங்கி முறையில் அமல்
ADDED : டிச 11, 2025 03:54 AM

சென்னை: ரயில்கள் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்துக்கு முன்பே, 'ரிசர்வேஷன் சார்ட்' எனப்படும், பயணியர் முன்பதிவு அட்டவணையை, தானியங்கி முறையில் வெளியிடும் நடைமுறை, தெற்கு ரயில்வேயில் நேற்று முதல் அமலானது.
ரயில் டிக்கெட்டுகளை இரண்டு மாதங்களுக்கு முன்பே, பயணியர் முன்பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது.
முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் நிலை குறித்த விபரம், ரயில் புறப்படும் நான்கு மணி நேரத்துக்கு முன் வெளியிடப்பட்டு வந்தது.
இந்த முறையில் மாற்றம் செய்து, ரயில்கள் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்துக்கு முன்பே, முன்பதிவு அட்டவணையை வெளியிடும் முறை, கடந்த ஆகஸ்ட் மாதம் அமலுக்கு வந்தது.
எனினும், அலுவலர்கள் முன்பதிவு அட்டவணையை தயாரித்ததால், காலதாமதம் உட்பட சில நடைமுறை சிக்கல் ஏற்பட்டது. இதை தவிர்க்க, தற்போது தானியங்கி முறையில் முன்பதிவு அட்டவணை வெளியிடும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
விரைவு ரயில்கள் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்துக்கு முன்பே, தானியங்கி முறையில், பயணியர் முன்பதிவு அட்டவணையை வெளியிடும் முறை தெற்கு ரயில்வேயின் அனைத்து கோட்டங்களிலும், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இது, காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணியருக்கு உதவியாக இருக்கும். பயணியர் அதிகமாக இருக்கும்போது, ரயில்வே நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை செய்ய வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

