ADDED : டிச 05, 2024 04:31 AM
சென்னை : தெற்கு ரயில்வே கோட்டங்களில் செயல்படும், தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தல் நேற்று துவங்கியது.
ரயில்வே தொழிலாளர்களின் பிரச்னைகள், தேவைகள் குறித்து நிர்வாகத்துடன் பேசுவதற்கு, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். கடந்த, 2013ல் நடந்த தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் எனும் எஸ்.ஆர்.எம்.யு வெற்றி பெற்று, அங்கீகார தொழிற்சங்கமாக செயல்பட்டது.
அதன்பின்,டி.ஆர்.இ.யு., உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள், அடுத்த தேர்தலை நடத்தும்படி வலியுறுத்திய நிலையில், கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், ரயில்வே வாரியம், தேர்தல் நடத்துவதாக அறிவித்தது. கடந்த மாதம் வரை வேட்பு மனு பெறப்பட்டது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட தேர்வு பட்டியலில், தட்ஷிண ரயில்வே ஊழியர்கள் சங்கம், தட்ஷிண ரயில்வே கார்மிக் சங்கம், ரயில் மஸ்துார் யூனியன், தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கம், தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் ஆகியவை இடம் பெற்றன. அச்சங்கத்தினர் ஊழியர்களிடம் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தெற்கு ரயில்வே சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட ஆறு கோட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 140 ஓட்டுச்சாவடிகளில், நேற்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியது.
சென்னையில் ரயில்வே கோட்ட அலுவலகம், தெற்கு ரயில்வே தலைமையகம், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் உள்ள ரயில்வே அலுவலகம், பெரம்பூர் பணிமனை உள்ளிட்ட 38 ஓட்டுச்சாவடிகளில், நேற்று காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுச்சாவடிகளில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி, தேர்தல் அதிகாரிகள் கண்காணித்தனர்.
நேற்று தொழிலாளர்கள் ஓட்டளித்தனர். இன்றும் அவர்கள் ஓட்டளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை, ரயில் ஓட்டுநர், கார்டுகள் ஓட்டளிப்பர். இதில், 30 சதவீதமான 23,000 ஓட்டுகளை பெறும் சங்கம் அங்கீகரிக்கப்படும்.