தமிழக ரயில் திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்பிய ரயில்வே
தமிழக ரயில் திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்பிய ரயில்வே
ADDED : ஜூன் 01, 2025 04:10 AM

சென்னை: தெற்கு ரயில்வேயில் நடக்கும், 10 ரயில் திட்டங்களுக்கு, மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி திருப்பி அனுப்பப்பட்டு உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நடக்கும் ரயில்வே திட்டங்களுக்கு, மத்திய பட்ஜெட்டில், 6,626 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு மட்டும், 617 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் நடக்கும், 10 ரயில் திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை மட்டும், பல்வேறு காரணங்களை முன்வைத்து, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் திருப்பி அனுப்பிஉள்ளார்.
குறிப்பாக, திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை; அத்திப்பட்டு - புதுார், ஈரோடு - பழனி; சென்னை - புதுச்சேரி - கடலுார்; காட்பாடி - விழுப்புரம்; ராமேஸ்வரம் - தனுஷ்கோடி; ஈரோடு - கரூர் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒதுக்கிய 600 கோடி ரூபாயை, 'சரண்டர்' செய்வதாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை என்றும், பெரும்பாலான திட்டங்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு நிலையில் உள்ளன என்றும், அதற்கு காரணங்கள் கூறப்பட்டுள்ளன.
இதுகுறித்து, கன்னியா குமரி மாவட்ட ரயில் பயணியர் சங்க தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது:
புதிய ரயில் பாதை திட்டப்பணிக்கு ஒதுக்கிய தொகையை, சரண்டர் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, கூடுதல் நிதியை பெற்று, புதிய ரயில் பாதை திட்டங்களை வேகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தெற்கு ரயில்வேயின் டி.ஆர்.இ.யு., தொழிற்சங்க நிர்வாகி இளங்கோவன் கூறியதாவது:
தமிழகத்தில் நடக்கும் ரயில் திட்டங்களுக்கு, 35,000 கோடி ரூபாய் தேவை. குறிப்பாக, புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு மட்டும் 14,682 கோடி ரூபாய் தேவை.
கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் தொகை ஒதுக்கவில்லை. நடப்பு பட்ஜெட்டில் தான் புதிய பாதை திட்டங்களுக்கு, 616 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த தொகையை ஆக்கப்பூர்வமான பணிக்கு பயன்படுத்தாமல், சரண்டர் செய்வது ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.