'ஹைப்பர் லுாப் டெஸ்ட் டிராக்' சென்னையில் ரயில்வே அமைப்பு
'ஹைப்பர் லுாப் டெஸ்ட் டிராக்' சென்னையில் ரயில்வே அமைப்பு
ADDED : டிச 07, 2024 02:02 AM

சென்னை : சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து, நாட்டில் முதன்முறையாக, சென்னை தையூரில், 410 மீட்டர் துாரத்திற்கு, 'ஹைப்பர் லுாப் டெஸ்ட் டிராக்' அமைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான வீடியோவை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று வெளியிட்டுள்ளார்.
அதிவேக ரயில் போக்குவரத்துக்கு வசதியாக, அடுத்த தலைமுறையான, 'ஹைப்பர் லுாப்' தொழில்நுட்பத்திற்கு ரயில்வே மாறி உள்ளது.
குறைந்த அழுத்த குழாய்களில், காந்தத்தின் இழுக்கும் சக்தியை பயன்படுத்தி, விமான வேகத்தில் ரயில்களை இயக்கும் தொழில்நுட்பத்தின் பெயர்தான், 'ஹைப்பர் லுாப்'.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பயணியர் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து வசதியை அளிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதற்கான திட்டத்தை செயல்படுத்தவும், முன்னோட்டமாக, 'டெஸ்ட் டிராக்' அமைக்கவும், சென்னை ஐ.ஐ.டி.,யுடன் ரயில்வே ஒப்பந்தம் செய்தது. இதற்கு, 8.34 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
இதையடுத்து, சென்னை ஐ.ஐ.டி.,யின் தையூர் வளாகத்தில், இரண்டு மீட்டர் நீளத்தில், 410 மீட்டர் துாரத்திற்கு பிரத்யேக சோதனை ரயில் பாதையாக, இந்த டெஸ்ட் டிராக் அமைக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பான வீடியோவை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுஉள்ளார்.