யானைகள் உயிரிழப்பை தடுக்க ரயில்வே முயற்சி; கோவை அருகே தண்டவாளத்தில் வேலி அமைப்பு
யானைகள் உயிரிழப்பை தடுக்க ரயில்வே முயற்சி; கோவை அருகே தண்டவாளத்தில் வேலி அமைப்பு
ADDED : ஜன 02, 2025 08:50 AM

கோவை: தமிழகம் - கேரளா எல்லையில், வாளையார் வனப்பகுதியில் தண்டவாளத்தின் இருபுறமும் இரும்பு வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. யானைகள் உயிரிழப்பை தடுக்க ரயில்வே துறை இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்திலிருந்து கோவை வழியாக கேரளா செல்லும் ரயில் பாதை, இரு மாநில எல்லையில், அடர்ந்த வனப் பகுதி வழியாக செல்கிறது. யானைகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் இந்த வனப்பகுதியில், ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. இதைத் தவிர்க்க ரயில்வே சார்பில், யானைகள் தண்டவாளத்தை கடந்து செல்வதற்கு வசதியாக, சில இடங்களில் தண்டவாளத்துக்கு கீழே பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு உதவியுடன், யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து எச்சரிக்கும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எட்டிமடை மற்றும் வாளையாருக்கு இடையேயான வனப்பகுதியில் வேலி அமைக்கும் பணியையும் ரயில்வே மேற்கொண்டுள்ளது. தண்டவாளத்தின் இருபுறமும் 2 கி.மீ தூரத்திற்கு பழைய தண்டவாளங்களால் ஆன ரயில் வேலி அமைக்கப்படுகிறது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது; யானைகள் ரயில் சென்று கொண்டிருக்கும் போது, தண்டவாளத்தை கடந்து காயம் ஏற்படுகின்றன. உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவும், யானைகள் தண்டவாளத்தை கடந்து செல்லாமல், சுரங்கப்பாதை வழியாக செல்வதை உறுதி செய்யவும், இந்த இரும்பு வேலி அமைக்கப்படுகிறது. இது காட்டு யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும். இவ்வாறு அவர்கள் கூறினர்.