மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்: அமைச்சர் உறுதி
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்: அமைச்சர் உறுதி
UPDATED : நவ 26, 2024 07:54 PM
ADDED : நவ 26, 2024 06:51 PM

சென்னை : '' வானிலை மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சரியான முறையில் எடுக்கப்பட்டு உள்ளன, '' என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.
சென்னை எழிலகத்தில் ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர்களுடன், அங்கு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அவர்களுக்கு தேவையான ஆலோசனையும் வழங்கி உள்ளார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறக்கூடும் என வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சென்னையிலும் வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியான முறையில் எடுத்துள்ளோம். மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகங்களை முடுக்கி விட்டுள்ளோம். முதல்வர் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார்.
தொடர்ந்து, மழை நிலவரத்தை அரசு கவனித்து கொண்டுள்ளது. கண்காணிப்பில் வைத்து உள்ளது. மழைநீர் பாயும் வாய்க்கால்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. பொது மக்களுக்கு சிரமம் இல்லாத சூழ்நிலையை அரசு உருவாக்கும்.
நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டிய அளவுக்கு நிலைமை ஏற்படவில்லை. மழை பெய்யும் என எதிர்பார்க்கிறோம். அதற்கு நிவாரண முகாம்களை தயார் செய்து வைத்துள்ளோம். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், கணக்கெடுப்பு நடத்தி நஷ்ட ஈடு வழங்கப்படும்.
நீர்நிலைகளை பொதுப்பணித்துறையினர் கண்காணிக்கின்றனர். பெரிய மழை வரும்போது தான் அதனை மிக எச்சரிக்கையாக பார்க்க வேண்டி உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் பாதியளவுக்கு தான் தண்ணீர் உள்ளது. மழை வரும்நேரத்தில் அதனை சேமித்து வைத்து, உபரி நீரை வெளியேற்ற வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். ஏரிகள் நிரம்பிய பிறகு எவ்வளவு மழை நீர் வருகிறதோ, அந்தளவு நீரை, மக்களுக்கு உரிய முறையில் எச்சரிக்கை செய்து வெளியேற்ற வேண்டும். சரியான முறையில் நிர்வாகம் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.