ADDED : டிச 07, 2025 06:16 AM

சென்னை: 'தமிழகத்தில் டிச., 12ம் தேதி வரை, லேசான மழை நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக உள்ளது. நேற்று காலை 8:30 மணியுடன் நிறைவு பெற்ற, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில், தலா 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
தற்போது, தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று, இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், நாளை முதல் டிச., 12ம் தேதி வரை, மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று, சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
பலத்த காற்று வீசும் என்பதால், தென் மாவட்ட கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்கு, டிச., 10ம் தேதி வரை, மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

