கவர்னர் மாளிகை 'லோக் பவன்' என மாற்றம்; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கவர்னர் மாளிகை 'லோக் பவன்' என மாற்றம்; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ADDED : டிச 01, 2025 04:53 PM

சென்னை: தமிழக கவர்னர் மாளிகையான ராஜ் பவன், 'லோக் பவன் தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
மக்களை மையமாகக் கொண்ட ஜனநாயகத்தின் நெறிமுறைகளை வலுப்படுத்தும் வகையில் ஒரு குறிப்பிடத்தக்க செயலாக, 'ராஜ் பவன், தமிழ்நாடு' உடனடியாக 'லோக் பவன், தமிழ்நாடு' என மறு பெயரிடப்படுகிறது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் முறையாக தெரிவிக்கப்பட்டபடி, கவர்னர் அலுவலகம் அனைத்து அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காகவும் 'லோக் பவன்' என மறு பெயரிடப்படும்.
மறுபெயரிடுதல் என்பது ராஜ் பவன், லோக் பவனாக பரிணமளிப்பதை பிரதிபலிக்கிறது. இந்த நடவடிக்கை மக்களை மையமாக கொண்ட நிர்வாகத்திற்கான நீண்டகால உறுதிப்பாட்டையும், மக்களுக்கான திட்டங்கள், அதன் முயற்சிகளில் தீவிரமாக பங்கேற்பதையும் முன்னெடுத்துச் செல்கிறது.
கலாசார பாரம்பரியம், நாகரிக மதிப்புகள் மற்றும் அரசியலமைப்பின் உணர்வை நிலை நிறுத்தும் தொடர் பயணத்தில் இது ஒரு அர்த்தமுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது. தமிழக சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் எண்ணங்களை எதிரொலிப்பதை தொடர்ந்து உறுதி செய்கிறது. பெயர் மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

