கடல் கடந்து வெற்றிகளை குவித்த ராஜேந்திர சோழனும்... கங்கை கொண்ட சோழபுரமும்..!
கடல் கடந்து வெற்றிகளை குவித்த ராஜேந்திர சோழனும்... கங்கை கொண்ட சோழபுரமும்..!
ADDED : ஜூலை 26, 2025 12:16 PM

தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் மூலமாக வட இந்தியா மட்டுமின்றி, கடல் கடந்தும் வெற்றிகளை குவித்தார். அதை நினைவுகூரும் வகையில் பிரதமர் மோடி இக்கோயிலுக்கு வருகை தருகிறார்.
தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜ சோழனின் மகன் தான் ராஜேந்திர சோழன். முதன்முதலில், கடற்படை அமைத்த பெருமை, முதலில், இலங்கையின் மீது, போர் நடத்தி வென்று, இலங்கையை ஆட்சி செய்த தமிழக மன்னன் என்ற பெருமையை பெற்றார். மதுரை,கேரளா உள்ளிட்ட தென்பகுதி முழுவதும், தன் கட்டுப்பாட்டு க்குள் கொண்டு வந்தார். கங்கையை கடந்து சென்று, பல பகுதிகளில் போர் செய்து, வெற்றியுடன் திரும்பியதே, கங்கை கொண்ட சோழபுரம் உருவாக காரணம். இந்தோனேஷியா, சுமத்ரா தீவில், கடற்கொள்ளையர்களுடன் போரிட்டு கடல்வழி வணிகத்தை மேம்படுத்தினார். வலிமையான, வளமான ஆட்சி புரிந்த, ராஜேந்திர சோழன் பெருமைகளை, இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்.
அரியலூர் கங்கை கொண்ட சோழபுரம்;
தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவர் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012- 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவருக்கு 'கடாரம் கொண்டான்' என்ற பட்டம் கிடைத்தது. தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப்போல், அரியலுார் கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தார். தஞ்சாவூரைப்போல் சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினார்.
சந்திரகாந்த கல்; கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும். பெரிய நாயகி அம்மன் பெயருக்கேற்றாற் போல் 9.5 அடி உயரத்தில் பிரமாண்டமாக அருள்பாலிக்கிறாள். இங்குள்ள நவக்கிரகம் மற்ற கோயில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகை
பிரசித்தி பெற்ற இந்த பிரகதீஸ்வரை தரிசனம் செய்ய பிரதமர் மோடி நாளை அரியலுார் கங்கைகொண்ட சோழபுரம் வருகிறார். முதலாம் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் வகையில், நினைவு நாணயம் வெளியிடுகிறார் பிரதமர் . சோழபுரம் கோவிலில் நடக்கும், ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்று பிறகு திருச்சியில் இருந்து டில்லி செல்கிறார்.

