''ரஜினி உடல்நிலை சீராக உள்ளது; 2 நாளில் வீடு திரும்புவார்'': மருத்துவமனை அறிக்கை
''ரஜினி உடல்நிலை சீராக உள்ளது; 2 நாளில் வீடு திரும்புவார்'': மருத்துவமனை அறிக்கை
UPDATED : அக் 01, 2024 05:41 PM
ADDED : அக் 01, 2024 04:58 PM

சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் 2 நாளில் வீடு
திரும்புவார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடிகர்
ரஜினிகாந்த் (வயது 74) திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ்
சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று (செப்.,30)
அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்,
மருத்துவமனை தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் வராமல்
இருந்தது.
ஆனால், ரஜினிக்கு அடிவயிற்றுக்கு அருகே ரத்த நாளம்
பெரிதாகி இருப்பதால் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்
வெளியானது. இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வெளியான
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திற்கு
செல்லும் ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த வீக்கம் அறுவை
சிகிச்சையின்றி அகற்றப்பட்டது. ரத்தக்குழாய் வீக்கத்திற்கான சிகிச்சைக்கு
ஸ்டன்ட் (STENT) பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக
உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
விஜய்
ரஜினிகாந்த் குணமடைய பிரார்த்திப்பதாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவருமான விஜய் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவு: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.