ADDED : பிப் 09, 2025 01:00 AM

''ரொம்ப வைப்ரென்ட்டா இருக்கீங்க... உங்களை பார்த்தாலே எங்களுக்கு ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் ஏற்படுகிறது என, என்னை பார்ப்பவர்கள் சொல்கின்றனர். அதன் ரகசியமே நான் செய்து வரும் கிரியா யோகா தான்,'' என, நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ஒய்.எஸ்.எஸ்., ஆசிரமத்தில், நடிகர் ரஜினிகாந்த் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் பேசியிருப்பதாவது:
கடவுள் அனுகிரஹத்தாலும், குருவின் அனுகிரஹத்தாலும், குரு யோகானந்தஜி அறையில் அமர்ந்து தியானம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.
நேற்று காலை ஒரு மணி நேரம் தியானம் செய்தேன். தியானம் செய்தபோது பெற்ற ஆழ்ந்த அனுபவத்தை வர்ணிக்க முடியாது.
எழுந்த பிறகுதான் எல்லாம் தெரிந்தது. கிரியா பற்றி நான் சொல்ல வேண்டும் என்றால், இப்போது என்னை பார்ப்பவர்கள் சொல்வதெல்லாம்... 'ரொம்ப வைப்ரென்ட்டா இருக்கீங்க... உங்களை பார்த்தாலே எங்களுக்கு ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் ஏற்படுகிறது' என்கின்றனர்.
அதன் ரகசியமே நான் செய்து வரும் கிரியா யோகா தான்.
நான் கிரியா செய்ய துவங்கியதில் இருந்து, 10 முதல் 12 ஆண்டுகளான பிறகுதான் ஒரு தாக்கம் எனக்குள் தெரிய துவங்கியது. எப்போதும் அமைதி, நிம்மதி. எதிலோ மிதப்பது போன்ற உணர்வு.
கிரியாவின், 'பவர்' எப்படி என்பது அதை தெரிந்தவர்களுக்கு தெரியும். தெரியாதவர்களுக்கு அது சீக்ரட். இதை யார் எல்லாம் தெரிந்து கொள்கின்றனரோ, அவர்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள். அது ஜென்ம பந்தம்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
- நமது நிருபர் -