ADDED : மார் 26, 2025 06:33 PM

கூலி கிடைத்தது
அலி (ரலி) என்பவர் குதிரையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தொழுகை நேரம் வரவே, ஓரிடத்தில் நின்றார். ஆனால் குதிரையை கட்டி வைக்க சரியான இடம் இல்லை. அங்கு இருந்த ஒரு நபரிடம், ''நான் தொழுகை முடித்த பின்னர் வருகிறேன். அதுவரை குதிரையைப் பிடித்துக் கொள்ளுங்கள். இரண்டு திர்ஹம் கூலி தருகிறேன்'' என்றார்.
அவரும் சம்மதிக்க சற்று தொலைவிற்கு சென்று தொழுகை செய்ய ஆரம்பித்தார். அப்போது அந்த நபருக்கு திருட்டு எண்ணம் உதித்தது. உடனே குதிரையில் ஏறினார். ஆனால் அது ஏறியவன் தன் எஜமான் அல்ல என்பதை அறிந்து, அவரை கீழே தள்ளியது. கிடைத்த வரைக்கும் ஆதாயம் என நினைத்து, அதன் கடிவாளத்தைக் கழற்றிக் கொண்டு ஓடினார்.
தொழுகையை முடித்து வந்தவர் அந்த நபரை தேடினார். அவர் இல்லை என்றதும் குதிரையில் ஏறினார். கடிவாளமும் இல்லை. ஆனாலும் ரலி வீடு வந்து சேர்ந்தார். பிறகு 'குதிரைக்கு புதிய கடிவாளம் வாங்கி வரும்படி' ஒருவரை அனுப்பினார். அவர் பல இடங்களில் சுற்றியும் கிடைக்கவில்லை.
கடைசியில் பழைய கடிவாளத்துடன் திரிந்த ஒரு நபரிடம், இரண்டு திர்ஹமை கொடுத்து வாங்கினார். அந்த நபர் வேறு யாருமல்ல. குதிரையை திருட நினைத்தவரே. பார்த்தீர்களா! கூலியாகக் கொடுக்க நினைத்ததும் இரண்டு திர்ஹம். திருடியதற்கு கிடைத்த பலனும் அதே இரண்டு திர்ஹம் தான்.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:48 மணி