ராமதாஸ் - சண்முகம் சந்திப்பில் அரசியல் பேசவில்லை:- அன்புமணி
ராமதாஸ் - சண்முகம் சந்திப்பில் அரசியல் பேசவில்லை:- அன்புமணி
ADDED : பிப் 08, 2024 03:33 AM

சென்னை: ''பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்,- அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பின்போது, அரசியல் பேசப்படவில்லை,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
'பசுமை தாயகம்' அமைப்பின் சார்பில், சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லுாரியில், நேற்று கருத்தரங்கம் நடந்தது. அதில் பங்கேற்ற பின், அன்புமணி அளித்த பேட்டி:
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாசை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்துப் பேசினார்.
இது, மரியாதை நிமித்தமான சந்திப்பு. அப்போது,அரசியல் பேசப்படவில்லை. குடும்ப நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கவே ராமதாசை அவர் சந்தித்தார்.
கூட்டணி தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம். யாருடன் பேசுகிறோம்; என்ன பேசுகிறோம் என்பதை, இப்போது கூற முடியாது.
சமீபத்தில் சென்னையிலும், தென் மாவட்டங்களிலும் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு காலநிலை மாற்றமே காரணம்.
காலநிலை மாற்றத்தால் வெள்ளம் மட்டுமல்ல; வறட்சியும் ஏற்படுகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்கின்றன.
இப்போது அரிசி விலை கிலோவுக்கு, 12 ரூபாய் உயர்ந்துள்ளது. வருங்காலத்தில் நிலைமை மேலும் மோசமாகும். காலநிலை மாற்றத்திற்கு சுற்றுச்சூழல் பாதிப்பு முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.

