ADDED : ஆக 21, 2024 04:32 AM

சென்னை : 'பட்டியலின, பழங்குடியினரை அதிக அளவில் பா.ம.க.,வில் சேர்க்க வேண்டும்' என, நிர்வாகிகளுக்கு அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.
'தமிழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக முடியாது' என, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறியது பெரும் சர்ச்சையானது. இதற்குப் பதிலளித்த ராமதாஸ், 'தமிழகத்தின் தனிப்பெரும் வன்னியர் சமுதாயமும், தனிப்பெரும் சமுதாய தொகுப்பான பட்டியலினமும் இணைந்தால், தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை எளிதில் கைப்பற்ற முடியும். பட்டியலினத்தைச் சேர்ந்தவர் முதல்வராக வர முடியும்' என, தெரிவித்திருந்தார்.
இது விவாதப் பொருளாகியுள்ள நிலையில், பா.ம.க.,வில் அதிக அளவு பட்டியலின, பழங்குடியினரை சேர்க்க வேண்டும் என்றும், கிராமங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, அரசியலில் ஆர்வம் உடைய பட்டியலின, பழங்குடியினரை இணைக்க வேண்டும் என்றும் ராமதாஸ் அறிவுறுத்தியதாக, அக்கட்சியினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டசபை தொகுதியைச் சேர்ந்த அ.ம.மு.க., மாவட்ட கலை இலக்கிய அணி இணைச்செயலரும், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான அன்பழகன் தலைமையில், பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், தைலாபுரம் தோட்டத்தில், ராமதாஸ் முன்னிலையில் நேற்று பா.ம.க.,வில் இணைந்தனர்.
'அடுத்தடுத்தும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தோர் அதிக அளவில் பா.ம.க.,வில் இணைவர்; அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கின்றன' என, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

