ADDED : ஜன 30, 2025 07:38 PM
சென்னை:மருத்துவ படிப்புகளில் வசிப்பிட ஒதுக்கீட்டுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், மாநில உரிமைகளை காக்க, அரசியல் சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
'மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், வசிப்பிட அடிப்படையிலான ஒதுக்கீடுகள் கூடாது. அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் இடமளிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகம் போன்ற, வலுவான மருத்துவ கல்வி கட்டமைப்பு கொண்ட மாநிலங்களின் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இடங்களை, பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு தாரை வார்க்க, இந்த சட்டம் வழிவகை செய்யும். இது மாநில உரிமைகளுக்கு எதிரானது.
'நாம் அனைவரும், இந்தியாவில் தான் வசிக்கிறோம். இந்திய குடிமக்கள் என்ற பொது பிணைப்பு, இந்தியாவின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வாழ்வதற்கும், வணிகம் செய்வதற்கும் உரிமை அளிக்கிறது. அதுபோல, இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும், மாணவர் சேர்க்கை கோரும் உரிமையை வழங்குகிறது. அதனால் வசிப்பிட அடிப்படையில், இடஒதுக்கீடு வழங்கக்கூடாது' என, நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இப்போது, மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீத இடங்கள் முழுக்க முழுக்க, தமிழக மாணவர்களை வைத்து நிரப்பப்படுகின்றன. உச்ச நீதிமன்ற தீர்ப்பால், மாநில ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத இடங்களில், வெளி மாநில மாணவர்களுக்கும், தகுதி அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். அதனால், தமிழக மருத்துவர்களுக்கு இடம் கிடைக்கும் வாய்ப்புகள் குறையும். போதிய டாக்டர்கள் கிடைக்காமல், தமிழக அரசு மருத்துவமனைகள் முடங்கும் நிலை உருவாகும்.
மருத்துவ மேற்படிப்புகளில், தமிழக ஒதுக்கீட்டுக்கான இடங்கள் பறிக்கப்படுவதை, அனுமதிக்க முடியாது. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில், மாநிலங்களின் உரிமைகளை காக்கும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தின் 15வது பிரிவில் உரிய திருத்தங்களை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.