அன்புமணி நடைபயணத்தை தடுக்க ராமதாஸ் தரப்பு வேண்டுகோள்
அன்புமணி நடைபயணத்தை தடுக்க ராமதாஸ் தரப்பு வேண்டுகோள்
ADDED : ஜூலை 27, 2025 01:23 AM
திண்டிவனம்:பா.ம.க., பெயரில், போலீஸ் தடையை மீறி நடைபயணம் மேற்கொள்பவர்கள் குறித்து பா.ம.க.,வினர் காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும் என, அன்புமணிக்கு எதிராக, அக்கட்சி தலைமை நிலைய செயலர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், அன்புமணி தி.மு.க., ஆட்சியை எதிர்த்து சென்னை அருகே உள்ள திருப்போரூரில், 'தமிழக மக்களின் உரிமையை மீட்போம்' என்ற கோஷத்தை முன்வைத்து, 100 நாள் நடைபயணத்தை நேற்று முன்தினம் துவங்கினார்.இந்த நடைபயணம் தன்னுடைய அனுமதி இல்லாமல் நடைபெறுவதாலும், நடைபயணத்தின் போது, பா.ம.க., கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். மேலும், நடைபயணத்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், நடைபயணத்தை தடை செய்ய வேண்டும் என, டி.ஜி.பி.,யிடம் ராமதாஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
போலீசாரும் நடைபயணத்திற்கு தடை விதித்துள்ளதாக அறிவித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் திருப்போரூரில் அன்புமணி திட்டமிட்ட படி நடைபயணத்தை துவக்கினார்.
இதை தொடர்ந்து, பா.ம.க.,வின் தலைமை நிலைய செயலர் அன்பழகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பா.ம.க.,வின் வேண்டுகோளை ஏற்று நடைபயணத்தை தடை செய்துள்ள டி.ஜி.பி.,க்கு, பா.ம.க., சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால், தடை உத்தரவை மீறி நடைபயணத்தை ஆரம்பித்து, பொதுக்கூட்டத்தையும் நடத்தியுள்ளனர். போலீஸ் தடையை மீறியவர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறை உத்தரவை மீறி செயல்படுவர்கள் மீது நீதிமன்றத்திற்கு சென்று, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், தடையை மீறி நடைபயணம் மேற்கொள்பவர்கள் குறித்து பா.ம.க.,வினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததும், அவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.