ADDED : ஜன 20, 2024 12:18 AM
தமிழகத்தில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை அதிக அளவாக 4,000 மெகாவாட் வரை மின் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று தென்மண்டல மின்பகிர்மான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தப் பற்றாக்குறையை சமாளிக்க மின் உற்பத்தித் திறனை அதிகரித்தல், வெளிச் சந்தையிலிருந்து மின்சாரம் வாங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும்.சூரிய ஒளி மின்சாரத்தின் உதவியுடன் பகல் நேரத்தில் பெரிய அளவில் மின்வெட்டு இல்லாமலோ, குறைந்த அளவு மின்வெட்டுடனோ தமிழகம் தப்பிவிடக்கூடும். ஆனால், இரவு நேரங்களில் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும்.
தமிழகத்தில் கோடை வெயில் முன்கூட்டியே சுட்டெரிக்கத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இரவு நேரத்தில் இந்த அளவு அதிக மின்வெட்டை மக்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது. ஆனால், தமிழகத்தின் மின்தேவை இந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதையோ, மின் பற்றாக்குறை ஏற்படும் என்பதையோ ஒப்புக்கொள்வதற்கே மின்வாரிய அதிகாரிகள் தயாராக இல்லை.
இந்த அலட்சியப் போக்கு தான் தமிழகத்தை இருளில் ஆழ்த்தப் போகிறது என்பதை அவர்கள் உணரவில்லை. அலட்சியப் போக்கை கைவிட்டு, மின்வெட்டை தடுக்க மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.