ADDED : பிப் 07, 2025 11:59 PM
மதுரை: ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்டை அகற்ற தாக்கலான வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
ராமநாதபுரம் தமிழ்வேந்தன் தாக்கல் செய்த பொதுநல மனு:
ராமேஸ்வரம்- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை இடையே எவ்வித அனுமதியும் இன்றி ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது.
மின்விளக்கு, எச்சரிக்கை அறிவிப்பு பலகை, வாகனங்களுக்கு மாற்று வழி வசதி இல்லை. பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
குறுகிய இருவழிப் பாதையில் போதிய வெளிச்சம் இல்லை. உள்ளூர் வாகனங்கள் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க எதிர் திசையில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
டோல்கேட்டை அகற்ற நடவடிக்கை கோரி தமிழக நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலர், ராமநாதபுரம் கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: ராமேஸ்வரம் நகராட்சி கமிஷனரை மற்றொரு எதிர்மனுதாரராக இணைக்க வேண்டும். விசாரணை பிப்.21 க்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.