ADDED : அக் 06, 2024 03:48 AM

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் 4ம் நாளாக தொடர்வதால் கடற்கரையில் மீனவர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.
இலங்கை சிறையில் வாடும் 150 தமிழக மீனவர்கள், 190 விசைப்படகுகள், நாட்டுப்படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் அக்.,2 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 700 விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் 4ம் நாளான நேற்றும் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து கோவை, கேரளா, கர்நாடகா மீன் மார்க்கெட் மற்றும் துாத்துக்குடியில் உள்ள மீன் அரவை ஆலைக்கு மீன்கள் செல்லாமல் பல கோடி ரூபாய் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுடன் சார்பு தொழிலாளர்கள், மீன் வியாபாரிகள் வருவாய் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண இலங்கை அரசு மற்றும் அந்நாட்டு மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.