ராமேஸ்வரம் தீவின் புதிய துாக்கு பாலம் சோதனை வெற்றி
ராமேஸ்வரம் தீவின் புதிய துாக்கு பாலம் சோதனை வெற்றி
UPDATED : அக் 02, 2024 06:55 AM
ADDED : அக் 02, 2024 02:28 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் தீவின் புதிய அடையாள சின்னமான பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலம் உயர்த்தும் சோதனை வெற்றி பெற்றது.
பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி முடிந்த நிலையில் இதன் நடுவில் 650 டன் துாக்கு பாலம் பொருத்தப்பட்டுள்ளது. திறந்து மூடும் சோதனைக்காக பாலத்தின் எடைக்கு நிகராக துாக்கு பாலத்தின் இருபுறம் துாணில் உள்ள இரு பெட்டியில் தலா 300 டன் இரும்பு பட்டைகள் ஏற்றினர்.
நேற்று காலை 11:00 மணிக்கு ரயில்வே பொறியாளர்கள் தேங்காய் உடைத்து சுவாமி கும்பிட்டு இனிப்பு வழங்கி துாக்கு பாலத்தை உயர்த்த ஹைட்ராலிக் இயந்திர பட்டனை அழுத்தினர். 2 அடி உயரத்திற்கு மட்டும் பாலத்தை உயர்த்தி கீழிறக்கினர்.
மீண்டும் மாலை 6:00 மணிக்கு 15 மீ., உயரத்திற்கு பாலத்தை உயர்த்தி கீழிறக்கி சோதனை நடத்தினர். சோதனை வெற்றி பெற்றதால் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இன்று (அக்.2) 22 மீ., வரை உயர்த்தி கீழிறக்க உள்ளதாக ரயில்வேபொறியாளர்கள் தெரிவித்தனர்.
துாக்கு பாலம் திறந்ததை உயர்த்தப்பட்டதை பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் நின்றபடி வேடிக்கை பார்த்த உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

