வன்கொடுமை வழக்கு: காஞ்சி டி.எஸ்.பி., கைது; நீதிபதி காரில் சிறைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு
வன்கொடுமை வழக்கு: காஞ்சி டி.எஸ்.பி., கைது; நீதிபதி காரில் சிறைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு
ADDED : செப் 09, 2025 03:12 AM

காஞ்சிபுரம் : எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை வழக்கில் பதிவு செய்யப்பட்டோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காத காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சங்கர்கணேஷை நேற்று கைது செய்ய, காஞ்சி புரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி, நேற்று உத்தரவிட்டார். நீதிமன்ற வளாகத்தில், காவலர் சீருடையுடன் டி.எஸ்.பி.,யை போலீசார் கைது செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது .
காஞ்சிபுரம் மாவட்டம், நத்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவ குமார். இவர், வாலாஜாபாத் அருகே உள்ள பூசிவாக்கம் கிராமத்தில் டீ மற்றும் பேக்கரி கடை நடத்துகிறார் .
கைகலப்பு
இந்த கடைக்கு, கடந்த ஜூலை மாதம் இறுதியில், பூசிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் கேக் வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது, கேக் நன்றாக இல்லை எனக்கூறியதால், கடை உரிமையாளர் சிவகுமாருக்கும், முருகனுக்கும் வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்திற்கு பின், சிவகுமாரின் மருமகனான, போலீஸ்காரராக பணியாற்றும் லோகேஷ், 32, முருகனிடம் பிரச்னை செய்துள்ளார். இதுகுறித்து முருகனின் மனைவி பார்வதி என்பவர், வாலாஜாபாத் போலீசில் சிவ குமார், லோகேஷ் உள்ளிட்ட நான்கு பேர் மீது புகார் அளித்தார்.
நான்கு பேர் மீதும் எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ், போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் அவர்களை கைது செய்யவில்லை. இதுகுறித்து தாமாக முன்வந்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செம்மல் விசாரணையை துவக்கினார்.
அப்போது, 'போலீஸ்காரரான லோகேஷ் உள்ளிட்ட நான்கு பேரையும், காவல் துறை ஏன் கைது செய்யவில்லை' என, கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நேற்று, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சங்கர்கணேஷ், இவ்வழக்கு சம்பந்தமாக ஆஜரானார்.
அப்போது, இந்த வழக்கில் லோகேஷ் மீது நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டிய நீதிபதி, டி.எஸ்.பி., சங்கர்கணேஷை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
டி.எஸ்.பி.,யை கைது செய்ய உத்தரவிட்டும், போலீசார் அவரை கைது செய்ய முன்வரவில்லை. இதையடுத்து, தன் காரிலேயே டி.எஸ்.பி.,யை நீதிமன்ற கிளை சிறைக்கு அழைத்து செல்ல, நீதிபதி செம்மல் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
பரபரப்பு
நீதிபதி காரில், அதே வளாகத்திலேயே உள்ள கிளை சிறைக்கு காவலர் சீருடையுடன் டி.எஸ்.பி., அழைத்து செல்லப்பட்டார்.
காரில் இருந்து இறங்கிய டி.எஸ்.பி., சங்கர்கணேஷ், அங்கு நிறுத்தியிருந்த 'பொலீரோ' போலீஸ் வாகனத்தில் ஏறினார். அதன் ஓட்டுநர், படுவேகமாக நீதிமன்ற வளாகத்திலிருந்து காரை ஓட்டிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால், கிளை சிறைக்கு செல்லாமல், டி.எஸ்.பி., மாயமானதாக தகவல் வெளியானது. ஆனால், 10 நிமிட இடைவெளியில், கிளை சிறைக்கு அவர் வந்துவிட்டார்.
கிளை சிறையில் இருந்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடித்து, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், நீதிமன்ற வளாகம் முழுதும் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிபதி செம்மல்லின், பி.எஸ்.ஓ., எனும் தனிப்பட்ட பாதுகாப்பு போலீஸ்காரராக லோகேஷ், சில மாதங்களுக்கு முன் பணிபுரிந்தார். திடீரென அவர், செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தை நாடுவோம்
முருகன் தரப்பு கொடுத்த புகாருக்கு நாங்கள் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம். டி.எஸ்.பி.,யை கைது செய்ய உத்தரவிட்டது எப்படி சரியாக இருக்கும். இந்த வழக்கில் தனிப்பட்ட வெறுப்பு உள்ளது. டி.எஸ்.பி., சங்கர்கணேஷ் எங்கேயும் தப்பி ஓடவில்லை. மதியம் முதல் நீதிமன்றத்திலேயே இருந்ததால், அவர் கழிப்பறைக்கு தான் சென்றார். தப்பி ஓடியதாக வந்த தகவல் பொய்யானது. நாங்கள், உயர் நீதிமன்றத்தை நாடி, இதற்கான தீர்வை பெறுவோம். - சண்முகம், காஞ்சிபுரம் எஸ்.பி.,