எலி ஒழிப்பு திட்டம் வேண்டும் : சட்டசபையில் எம்.எல்.ஏ., கோரிக்கை
எலி ஒழிப்பு திட்டம் வேண்டும் : சட்டசபையில் எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : ஆக 17, 2011 12:46 AM
சென்னை : ''எலி ஒழிப்பு திட்டத்தை கொண்டு வந்து, விவசாயிகளுக்கு எலிப் பொறி மற்றும் எலி ஒழிப்பு கருவிகளை இலவசமாக வழங்க வேண்டும்,'' என்று தே.மு.தி.க., உறுப்பினர் வலியுறுத்தினார்.
சட்டசபையில், வேளாண்மைத் துறைக்கான மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம்:
கிருஷ்ணசாமி - புதிய தமிழகம் : முந்தைய அரசு, 7,000 கோடி ரூபாய் விவசாய கடனை ரத்து செய்ததாக கூறியது.
அவ்வாறு ரத்து செய்திருந்தால், மீண்டும் விவசாய வளர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், விவசாய நிலங்கள் மனைப்பட்டாக்ககளாகவும், தொழிற்சாலைகள் அமைக்கவும், ரியல் எஸ்டேட் தொழிலுக்கு இந்த நிலங்களில் முதலீடு செய்து, வீணாக போட்டு வைத்திருந்ததாகவம், விவசாய வளர்ச்சி மைனசில் சென்றுள்ளது. எனவே, யார் விவசாயம் செய்கிறார்களே அவர்களிடம் விவசாய நிலங்களை ஒப்படைக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் எந்த பகுதியிலும் விளை நிலங்கள் பயன்படுத்தப்படாவிட்டால் அவற்றை கையகப்படுத்த வேண்டும். 40 சதவீதம் கூட தகுதியான விதை இல்லை. தென்னங்கன்றுகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன.
அமைச்சர் செங்கோட்டையன் : வருங்காலத்தில் விதை விநியோகத்தில் குறைபாடுகள் இருக்காது. இதை அரசு அனுமதிக்காது. ஒரு காலத்தில் தென்னை விவசாயிகள் அதிகம் இருந்தனர். தற்போது ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. வேளாண் துறை மூலம் குறிப்பிட்ட அளவு தான் தென்னங்கன்றுகள் வழங்க முடியும். தனியார் கூடுதல் விலைக்கு விற்காமல் அரசு கண்காணிக்கும்.
கிருஷ்ணசாமி : சிலசமயங்களில், தனியார் விற்கும் இயற்கை உரங்கள், நிலங்களை பாழ்படுத்தி விடுகின்றன. கலப்பட உரங்களை தனியார் விற்கின்றனர்.
அமைச்சர் செங்கோட்டையன் : மானியம் விலையில் தனியார் மூலம் வழங்கும் உரங்களை, நேரடியாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கலப்பட நிலை தமிழகத்தில் இருக்காது. முந்தைய ஆட்சியில் அதுபோன்ற நிலை இருந்தாலும், வருங்காலங்களில் அவை தடுக்கப்படும்.
அருள்செல்வன் - பா.ம.க., : புலிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சியினர் பேசினர். நாகை மாவட்டத்தில், எலிகளிடம் இருந்து பாதுகாப்பு தேவைப்படும் நிலை உள்ளது. முன்பு, புகையான் நோய் தாக்கினால், அனைத்து சாகுபடியும் வீணாகிவிடும். எலி ஒழிப்பு திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும். இதற்காக முகாம்கள் நடத்த வேண்டும். விவசாயிகளுக்கு, எலிப் பொறி மற்றும் எலி ஒழிப்பு கருவிகளை இலவசமாக கொடுக்க வேண்டும். இடுபொருட்கள் கொடுப்பத்தில் பல முறைகேடுகள் நடக்கின்றன.
அமைச்சர் செங்கோட்டையன் : இடுபொருட்கள் மற்றும் வேளாண் கருவிகள் யார் யாருக்கு வழங்கப்பட்டது என்பதை கம்ப்யூட்டரில் தினமும் பதிவு செய்து, அந்த தகவல்களை, வேளாண்மை துறை மற்றும் வேளாண் கமிஷனருக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, யாருக்கு எப்போது கொடுக்கப்பட்டது என்பது பற்றி எப்போது கேட்டாலும், அந்த பட்டியல் தர ஏற்பாடு செய்யப்படும்.
எஸ்.கே.செல்வம் - அ.தி.மு.க., : வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்ததால், சேலம் மக்கள் தற்போது சுதந்திர காற்றை அனுபவிக்கின்றனர். வேளாண்மை துறையில் முந்தைய ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. கருணாநிதி மற்றும் வீரபாண்டி ஆறுமுகம் மீது பெரிய விசாரணை கமிஷன் அமைத்து, இவை பற்றி விசாரிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.