ADDED : மார் 06, 2024 01:40 AM
சென்னை:'வெயிலில் கார்டுதாரர்களை அலைக்கழிக்கக் கூடாது; ஒரே தவணையில், அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும்' என, ரேஷன் ஊழியர்களுக்கு, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கப்படுகின்றன.
அவற்றை கடை ஊழியர்கள், ஒரே தவணையில் வினியோகம் செய்யாமல், ஒரு நாளைக்கு அரிசி தருகின்றனர்.
மற்ற பொருட்களை வேறொரு நாளில் என, தங்களின் இஷ்டத்திற்கு வழங்குகின்றனர். இதனால், கார்டுதாரர்கள் பலமுறை கடைக்கு வர வேண்டியுள்ளது.
தற்போது, கோடைக் காலம் துவங்கியுள்ளதால், வெயில் சுட்டெரிக்கிறது.
இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கார்டுதாரர்களை அலைக்கழிக்காமல் ஒரே தவணையில், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என, ரேஷன் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதற்கு ஏற்ப, கடைகளுக்கு முழு அளவில் பொருட்களை அனுப்புமாறு நுகர்பொருள் வாணிப கழகத்திடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
உணவு வழங்கல் துறை மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தொடர் ஆய்வில் ஈடுபட்டு, ஒரே தவணையில் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

