முதியோர் வீடுகளுக்கு இன்றும் நாளையும் ரேஷன் வினியோகம்
முதியோர் வீடுகளுக்கு இன்றும் நாளையும் ரேஷன் வினியோகம்
ADDED : ஜூன் 02, 2026 02:21 AM
சென்னை: முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு இன்றும், நாளையும் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன.
தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு, அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன.
இவற்றை வாங்க கடைகளுக்கு செல்ல முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதனால், 65 வயதுக்கு மேற்பட்ட, 17 லட்சம் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை, தமிழக அரசு, 2025 ஆகஸ்டில் தொடங்கியது.
அத்திட்டம் தொடங்கியதில் இருந்து, கடந்த மாதம் வரை, வீட்டிற்கு பொருட்களை வாகனத்தில் எடுத்துச் செல்ல வாகன வாடகை, பணியாளர்கள் சம்பளத்துக்கான செலவு நிதியை கூட்டுறவு சங்கங்களுக்கு, அரசு வழங்கவில்லை. இதனால், சங்கங்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என்று, பலரும் சந்தேகம் எழுப்பினர்.
இந்நிலையில், சென்னை யில் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு இன்றும், நாளையும் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளதாக, சென்னை மண்டல கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 990 ரேஷன் கடை பணியாளர்கள் வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்க உள்ளனர். இதேபோல், மற்ற மாவட்டங்களிலும் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
