கடமையில் இருந்து தவறினால்...: மம்தா அரசுக்கு கவர்னர் எச்சரிக்கை
கடமையில் இருந்து தவறினால்...: மம்தா அரசுக்கு கவர்னர் எச்சரிக்கை
ADDED : ஜன 05, 2024 05:07 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் சோதனைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில கவர்னர் ஆனந்த் போஸ், ‛‛மாநில அரசு கடமையில் இருந்து தவறினால், அரசியல்சாசனம் தனது கடமையைச் செய்யும்'' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ரேஷன் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த பல மாதங்களாக சோதனை நடத்தி வருகின்றனர். இன்று, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ஷேக் ஷாஜகான் என்பவரது வீட்டில் சோதனை செய்ய சென்றனர். சந்தேஷ்காலி பகுதி அருகே, அவர்களை மறித்த உள்ளூர்வாசிகள் அதிகாரிகளை தாக்கியதுடன், வாகனங்களை சேதப்படுத்தினர். இந்த தாக்குதலில் அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக மாநில கவர்னர் ஆனந்த் போஸ் கூறுகையில், ‛‛ அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் கேவலமானது. கவலைக்குரியது. கண்டனத்திற்குரிய விஷயமும் கூட. ஜனநாயகத்தில் காட்டுமிராண்டித்தனத்தையும், நாசவேலையையும் தடுத்து நிறுத்துவது நாகரீகமான அரசின் கடமை. ஒரு அரசு தனது அடிப்படை கடமையில் இருந்து தவறினால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனது கடமையைச் செய்யும். தகுந்த நடவடிக்கை எடுக்க அரசியலமைப்பு வழங்கிய எனது அதிகாரத்தை பயன்படுத்துவேன். தேர்தலுக்கு முந்தைய வன்முறைகள் முன்கூட்டியே முடிவுக்கு வர வேண்டும். அதற்கு இந்த சம்பவம் ஆரம்பமாக இருக்க வேண்டும்'' என்றார்.
கடிதம்
இதனிடையே, பா.ஜ., மாநில தலைவர் சுகுந்தா மஜூம்தார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
பா.ஜ.,வின் சுவேந்து அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், ‛‛ மம்தாவின் உறுதிமொழி மற்றும் தூண்டுதல் காரணமாக, ஷேக் ஷாஜகான் போன்ற கிரிமினல்கள், ரோஹிங்கியாக்களை தனது ஆதரவாளர்களாக வைத்துக்கொண்டு பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்ற முயல்கின்றனர்'' என்றனர்.