ADDED : ஆக 12, 2026 01:25 AM

தேனி: தமிழகத்தில் நேற்று ரேஷன் பொருட்கள் விற்பனைக்கான 'சர்வர்' முடங்கியதால் வினியோகம் பாதித்தது.
மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. சில ஆண்டுகளாக ரேஷன் வினியோகத்தில் பி.ஓ.எஸ்., மிஷின்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை 'சர்வர்' ஆன்லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் பொருட்கள் விற்பனை செய்தால் வாடிக்கையாளர்கள், கூட்டுறவு சங்கம், கூட்டுறவு அதிகாரிகளுக்கு உடனே தகவல் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அலைபேசியிலேயே ரேஷன் கடைகளில் எவ்வளவு பொருட்கள் இருப்பு உள்ளது என்பது அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் துவக்கத்தில் இருந்து ரேஷன் கடைகளில் 'சர்வர்' சரிவர இயங்கவில்லை. இதன் காரணமாக பொருட்கள் வினியோகத்தில் தடங்கல்ஏற்பட்டு வருகிறது. நேற்று காலை தமிழகம் முழுவதும் ஒரு மணி நேரம் முதல் 3 மணிநேரம் வரை 'சர்வர்' இயங்காததால் பொருட்கள் வினியோகம் பாதித்தது. பல இடங்களில் விற்பனையாளர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ரேஷன் பொருட்கள் வினியோகத்திற்கான 'சாப்ட்வேர்' மேம்படுத்தப்பட்டு வருவதால் சர்வர் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம்' என்றனர்.
