ADDED : ஏப் 09, 2025 01:18 AM
சென்னை:பொது வினியோக திட்டத்திற்கு, தனித்துறையை உருவாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர், மாநிலம் முழுதும் நேற்று வேலை நிறுத்தம் செய்து, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழிலகம் வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் ஜெயச்சந்திரராஜா கூறியதாவது:
ரேஷன் கடைகளில் மின்னணு தராசுடன் விற்பனை முனைய கருவியை இணைத்து, பொருட்கள் வழங்குமாறு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதேபோல, வாணிப கழக கிடங்குகளில் இருந்து, பொருட்களை அனுப்பும் போதும், எடை தராசு, கணினியை இணைத்து, சரியான எடையில் பொருட்களை அனுப்ப வேண்டும்.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நிர்ணயம் செய்ய, ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டும்.
பொது வினியோக திட்டத்திற்கு, தனித்துறை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். சட்டசபையில் இவை தொடர்பான அறிவிப்பை வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது. அடுத்தக்கட்ட போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.