பட்டாசு வாங்க நிர்ப்பந்தம் ரேஷன் ஊழியர்கள் அதிருப்தி
பட்டாசு வாங்க நிர்ப்பந்தம் ரேஷன் ஊழியர்கள் அதிருப்தி
ADDED : அக் 17, 2025 11:05 PM
சென்னை: ரேஷன் கடை ஊழியர்களை கட்டாயமாக பட்டாசு வாங்குமாறு, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நிர்ப்பந்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
கூட்டுறவு பண்டக சாலைகள், ரேஷன் கடை, பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றை நடத்துகின்றன. தமிழகம் முழுதும், தீபாவளியை முன்னிட்டு, கூட்டுறவு பண்டக சாலைகள் சார்பில் பட்டாசு கடைகள் துவக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும், ரேஷன் கடை ஊழியர்களிடம், 'பட்டாசு விருப்பப்பட்டு வாங்கிக் கொள்கிறேன்' என, கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு, 1,000 முதல், 6,000 ரூபாய் வரை, கட்டாயம் பட்டாசு வாங்க வேண்டும் என, பண்டகசாலை அதிகாரிகள் நிர்ப்பந்தம் செய்கின்றனர்.
ஏற்கனவே குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் ஊழியர்களை, பட்டாசு வாங்க சொல்லி கட்டாயப்படுத்துவது, எந்த வகையில் நியாயம். கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்குவதாக அறிவித்தாலும், லாபம் ஈட்டும் சங்கங்களில் மட்டுமே முழு போனஸ் வழங்கப்படுகிறது.
நஷ்டத்தில் இயங்கும் சங்கங்களின் ஊழியர்களுக்கு, 10 சதவீதம், 3,000, 2,500 ரூபாய் என, இஷ்டத்துக்கு போனஸ் தொகை வழங்கப்படுகிறது. சங்கங்களின் நஷ்டத்துக்கு அதிகாரிகள் தான் காரணம். எனவே, அனைத்து சங்கங்களின் ஊழியர்களுக்கும், ஒரே மாதிரியாக போனஸ் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.