ஒரு வழியாக ஆர்.பி.உதயகுமாருக்கு துணை தலைவர் இருக்கை ஒதுக்கப்பட்டது: ஓ.பி.எஸ் 2வது வரிசைக்கு மாற்றம்
ஒரு வழியாக ஆர்.பி.உதயகுமாருக்கு துணை தலைவர் இருக்கை ஒதுக்கப்பட்டது: ஓ.பி.எஸ் 2வது வரிசைக்கு மாற்றம்
UPDATED : பிப் 14, 2024 12:55 PM
ADDED : பிப் 14, 2024 10:03 AM

சென்னை: சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை அதிமுக.,வின் உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டது. அந்த இருக்கையில் அமர்ந்திருந்த ஓ.பி.எஸ்.,க்கு 2வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது.
அதிமுக.,வில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டபோது, சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டார். அப்போதிருந்து துணை தலைவர் இருக்கையை உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏ.,க்கள் சார்பாக பலமுறை சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையே நேற்றைய கூட்டத் தொடரின்போதும், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், ''துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு துணைத் தலைவருக்கான இருக்கை ஒதுக்கப்பட வேண்டும்'' என முறையிட்டார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ''எதிர்க்கட்சி தலைவர், தங்கள் கட்சியின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள உதயகுமாருக்கு இடம் ஒதுக்கித் தரும் பிரச்னை குறித்து அவையில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அவரது கோரிக்கையை மறு பரிசீலனை செய்து அதற்கு ஆவண செய்யும்படி தங்களிடம் நான் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்றார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு, ''முதல்வர் கூறியதை ஏற்று, தக்க முடிவை நான் எடுக்கிறேன்'' என்றார்.
இந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ்.,க்கு இரண்டாவது வரிசையில் முன்னாள் சபாநாயகர் தனபால் அருகே இருக்கை ஒதுக்கப்பட்டது. அதேபோல், ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் இருக்கையும் மாற்றப்பட்டது. அவருக்கு ஆர்.பி.உதயகுமார் முன்பு அமர்ந்த இடம் ஒதுக்கப்பட்டது.

