மணிக்கட்டு வெட்டப்பட்ட வாலிபருக்கு மறு இணைப்பு அறுவை சிகிச்சை
மணிக்கட்டு வெட்டப்பட்ட வாலிபருக்கு மறு இணைப்பு அறுவை சிகிச்சை
ADDED : பிப் 08, 2025 12:30 AM
சென்னை:மரம் வெட்டும் இயந்திரத்தில், இடது கை மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு, கை மறு இணைப்பு அறுவை சிகிச்சை வழியே மணிக்கட்டு இணைக்கப்பட்டது.
செங்கல்பட்டைச் சேர்ந்தவர் சரவணன், 29; சோழிங்கநல்லுாரில் உள்ள மரம் அறுக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்; 12 ஆண்டுகளாக இப்பணியை செய்து வருகிறார்.
கடந்த 5ம் தேதி காலை 11:00 மணிக்கு மரம் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அவரது இடது கை, இயந்திரத்தில் சிக்கியது. இடது மணிக்கட்டு வெட்டப்பட்டு துண்டாகும் நிலை ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
கை துண்டிக்கப்பட்டு, ஆறு மணி நேரத்திற்குள் அவர் மருத்துவமனைக்கு வந்ததால், மருத்துவக் குழுவினர், கை மறு இணைப்பு அறுவை சிகிச்சை வாயிலாக, அவரது மணிக்கட்டை கையுடன் இணைத்து சரி செய்தனர்.
அறுவை சிகிச்சை குறித்து, மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறியதாவது:
மருத்துவப் பரிசோதனையின் போது, அவரது இடது மணிக்கட்டில் வெட்டுக்காயம், 8X3 செ.மீ., அளவில் காணப்பட்டது.
கை விரல்களுக்கு செல்லும் ரத்த நாளங்கள் மற்றும் தசை நார்கள் முழுதும் வெட்டப்பட்ட நிலையில், அனைத்து விரல்களும் அசைவற்ற நிலையில் இருந்தன. ரத்த ஓட்டம் இல்லாததால், அனைத்து கை விரல்களும் வெளுத்த நிலையில் இருந்தன.
'எக்ஸ்-ரே' பரிசோதனையில், இடது கை எலும்பு முறிவுடன் காணப்பட்டது. அவருக்கு மூன்று குழுக்களாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
முதலில், மயக்கவியல் துறை டாக்டர்கள் பாலாஜி, சுபாஷினி உள்ளிட்டோர், நோயாளியை மயக்கமடையச் செய்தனர்.
பின், எலும்பு முறிவு அறுவை சிகிச்சை துறை டாக்டர்கள் முத்தழகன், சுஹாஸ் ஷெட்டி, மதன்குமார் ஆகியோர், கை எலும்பு முறிவை சரி செய்தனர்.
பின், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை டாக்டர்கள் சுகுமார், ராஜேஸ்வரி உள்ளிட்டோர், வெட்டப்பட்ட ரத்த நாளங்கள், தசை நார்கள், நரம்புகளை எட்டு மணி நேர சிகிச்சைக்கு பின் சரி செய்தனர்.
அறுவை சிகிச்சைக்கு பின், உயிரற்ற கை விரல்கள் புத்துயிர் பெற்றன. கை விரல்களின் ரத்த ஓட்டம் சீரானது. தற்போது அவர் நலமுடன் உள்ளார்.
இவ்வாறு கூறினர்.