ADDED : செப் 13, 2026 12:02 AM

சென்னை: 'தினமலர்' நாளிதழின் பவளவிழா தொடர்ச்சியாக, சென்னை எஸ்.ஆர்.எம்., தமிழ்ப் பேராயம் - தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய, வாசகர் விழாவில், ஏராளமான வாசகர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
விழா, எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில், தி.பொ.கணேசன் அரங்கில், நேற்று நடந்தது. எஸ்.ஆர்.எம்., தமிழ்ப் பேராயத்தின் தலைவர் கரு.நாகராஜன் வரவேற்புரை ஆற்றினார்.
'தினமலர்' நாளிதழ் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்தும், நினைவு பரிசு வழங்கியும் கவுரவித்தார். பின், 'ஒரு பத்திரிகையால் என்ன சாதிக்க முடியும்; அதில், 'தினமலர் ' நாளிதழ் என்ன சாதித்திருக்கிறது?' என்ற தலைப்பில், எழுத்தாளர் ஜெயமோகன் பேசினார்.
அதைத் தொடர்ந்து, 'தினமலர்' நாளிதழின் 75ம் ஆண்டையொட்டி, முக்கிய பிரமுகர்கள் அனுப்பிய வாழ்த்து கடிதங்களின் தொகுப்பு, 'வாசகரின் நேசம்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.
அதை, எஸ்.ஆர்.எம்., பல்கலை பதிவாளர் பொன்னுசாமி வெளியிட, அதன் முதல் பிரதி நிதியை, எழுத்தாளர் ஜெயமோகன், த.வெ.க.,வின் முதன்மை செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன், தமிழக காங்கிரஸ் துணை தலைவர் கோபண்ணா, தமிழக பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன், பட்டிமன்ற பேச்சாளரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான சுமதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அடுத்ததாக, அரசியல் அரங்கம் நிகழ்ச்சி நடந்தது. இதில், 'தினமலர் நாளிதழின் அரசியல் பார்வை, கட்சி சார்ந்ததா; கட்சி சாராததா' என்ற தலைப்பில், விவாதம் நடந்தது. விவாதத்தை, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுமதி ஒருங்கிணைத்தார். வைகைச்செல்வன், கோபண்ணா, அஸ்வத்தாமன் ஆகியோர் பேசினர்.
'தினமலர்' நாளிதழின் பார்வை, நாளிதழுக்கும் தங்களுக்குமான அனுபவம், நினைவுகள் ஆகியவற்றை, சுவாரஸ்யம் கலந்தும், நகைச்சுவையுடனும் பேச்சாளர்கள் தங்கள் கருத்தை பகிர்ந்துக் கொண்டனர்.
பொது மக்கள், வாசகர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, 'நேருக்கு நேர்' என்ற தலைப்பில், 'தினமலர்' நாளிதழ் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, 'தினமலர்' வாசகர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்தார்.
இந்த விழாவில், அரசியல் கட்சி பிரமுகர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், மாணவ - மாணவியர் உற்சாகத்துடன் பங்கேற்றனர். விழாவின் தொடக்கமாக, மாணவ - மாணவியரின் பரத நாட்டியம், நடனம் மற்றும் இன்னிசை பாடல் என, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
