ADDED : ஏப் 04, 2025 01:16 AM
சென்னை:குப்பை கிடங்கிற்கு இடம் இருந்தால், பணம் கொடுத்து வாங்க அரசு தயாராக இருப்பதாக, அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - பாண்டியன்: சிதம்பரம் நகராட்சி குப்பை கிடங்கு, ஓமக்குளம் பகுதியில் உள்ளது. இங்கு குப்பை மலை போல் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சுற்றுப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
சில சமூக விரோதிகள் குப்பையை எரிப்பதால் வரும் புகையால், அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாச கோளாறுகள் ஏற்படுகின்றன.
எனவே, குடியிருப்பு பகுதிகளையொட்டி குப்பை கிடங்கு அமைக்காமல், மக்களை பாதிக்காத வகையில் மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்.
அமைச்சர் நேரு: நகரத்திற்கு மத்தியில் குப்பை கொட்ட வேண்டும் என, அரசு நினைக்கவில்லை. குப்பை கிடங்கு அமைக்க இடம் இருந்தால் சொல்லுங்கள். பணம் கொடுத்து வாங்க அரசு தயாராக உள்ளது. சிதம்பரத்தில் குப்பை கிடங்கில் மாசு அதிகம் என்றால், அதை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

