அரசு நிலத்தை அரசுக்கே விற்று மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குநர் கைது
அரசு நிலத்தை அரசுக்கே விற்று மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குநர் கைது
ADDED : நவ 25, 2025 10:18 PM

சென்னை : சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, 'எக்ஸ்பிரஸ் ஹைவே' திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியபோது, அரசு நிலத்தை அரசுக்கே விற்று, 33 கோடி ரூபாய் மோசடியாக இழப்பீடு தொகை பெற்ற, 'அரிஹந்த் ஷெல்டர் ரியல் எஸ்டேட்' நிறுவன இயக்குநர் ஆசிஷ் ஜெயின் கைது செய்யப்பட்டார்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 'எக்ஸ்பிரஸ் ஹைவே' திட்டத்திற்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 175 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக, 83 பேருக்கு, 200 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது.
இதில், அரசுக்கு சொந்தமான அனாதீனமான நிலங்களுக்கு மோசடியாக இழப்பீடு தொகை பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகார் குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, 7.5 ஏக்கர் நிலத்திற்கு மோசடியாக பட்டா பெற்று, தேசிய நெடுஞ்சாலை துறையை ஏமாற்றி, 33 கோடி ரூபாயை, அரிஹந்த் ஷெல்டர் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநர் ஆசிஷ் ஜெயின் மற்றும் அவரது கூட்டாளிகள் பெற்றது தெரியவந்தது.இது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து, ஆசிஷ் ஜெயின், 41, உள்ளிட்டோர் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக, ஆசிஷ் ஜெயினை கைது செய்தனர். இழப்பீடு தொகை பெற்ற, 83 பேர் குறித்தும், இழப்பீடு தொகை பெற அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

