sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/நகராட்சி பணிகள் தேக்கமாவதற்கு காரணம் என்ன?

நகராட்சி பணிகள் தேக்கமாவதற்கு காரணம் என்ன?

நகராட்சி பணிகள் தேக்கமாவதற்கு காரணம் என்ன?


ADDED : மே 15, 2012 12:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2012 12:26 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் பெரும்பாலான நகராட்சிகளில் கமிஷனர், துப்புரவு பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதால், பணிகள் தேக்கமடைந்து உள்ளன. நகராட்சிகளின் வருவாய்க்கு ஏற்ற வகையில், பணியிடங்களை உருவாக்கும் முறையில் மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என, பணியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. தமிழகத்தில், 125 நகராட்சிகள் உள்ளன. நகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு குடிநீர் சப்ளை, தெருவிளக்கு, சாலை பராமரிப்பு, நகர் நிர்மாணிப்பு, வரி வசூல் செய்வது, நகராட்சி பணியாளர்களின் பணி; இந்த பணிகளை கண்காணித்து நிர்வாகத்தை செம்மைப்படுத்துவது கமிஷனரின் பணி.

பணியிடம் நிரப்பல் : நகராட்சிகளில் காலியாகும் பணியிடங்களை, அதன் வருவாயை கருத்தில் கொண்டு, அதன் அடிப்படையில் அரசு நிரப்பி வருகிறது. நகராட்சியின் மொத்த வருமானத்தில், 49 சதவீதத்திற்குள் பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்டவை இருக்க வேண்டும் என்ற வரைமுறைப்படி, பணியிடங்கள் நிரப்பப் படுகின்றன. நகராட்சிகளின் வருவாய் பட்டியலில் இருந்த கேளிக்கை வரி, பத்திரப்பதிவு வரி ஆகியவை விலக்கப் பட்டதால், வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், சொத்து, தொழில், காலியிட வரி தான் நகராட்சிகளை காப்பாற்றி வருகிறது. இந்த வரி வசூலைப் பொறுத்தே, நகராட்சிகளில் பணிபுரிபவருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. பெரும்பாலான நகராட்சிகளில் வரி வருவாய், அதள பாதாளத்திற்கு சென்று விட்டதால், மாதா மாதம் சம்பளம் பெற முடியாமல் பணியாளர்கள் தவித்து வருகின்றனர்.

நியாயமில்லை : இதுகுறித்து, நகராட்சி பணியாளர் ஒருவர் கூறியதாவது: நகராட்சியின் வருமானம், கட்டுப்படுத்தப் பட்ட வருமானம் தான். எவ்வளவு வரிவசூல் செய்யலாம் என்பதை, அரசு தான் முடிவு செய்கிறது. நகராட்சிகளின் வருமானத்தை வெட்டி, சுருக்கி விட்டு, அந்த வரையறைக்குள் பணியிடம் உருவாக்குதல், பணியாளர் சம்பளம் போன்றவற்றை அடக்குவது நியாயமில்லை. தற்போது, 49 சதவீதம் என்ற வரைமுறையை, 65 சதவீதம் என, தற்காலிகமாக உயர்த்தி, 12 ஆயிரம் பணியாளர்களை நியமிப்பதாக, அரசு அறிவித்து உள்ளது.

ஆனால், இந்த வரைமுறைகளை நீக்கி, நகராட்சிகளின் வருவாயை கணக்கில் கொள்ளாமல், நியமனம், சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை அரசுத்துறையில் உள்ளது போல் வழங்குவதே நிரந்தர தீர்வாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார். சம்பளம் பெறுவதில் மட்டுமல்லாமல், ஓய்வூதியம் பெறுவதிலும் நகராட்சி பணியாளர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. நகராட்சிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற, 700 பேர், ஓய்வூதியம் பெற ஓர் ஆண்டாகவும்; குடும்ப ஓய்வூதிய திட்டத்தில் பலன் பெற, மூன்று ஆண்டுகளாகவும், பணியாளர்களின் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.

பணியாளர் குறைவு : நகராட்சிகளில், 30 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் பணியாற்றிய இடத்தில், தற்போது, 12 ஆயிரம் பேரும்; நகராட்சியின் இதர பணியிடங்களில், 18 ஆயிரம் பேருக்கு, 7,000 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். மேலாளர், பதிவு எழுத்தர் முதல் கமிஷனர் பதவி வரை, நீண்ட நாட்களாக காலியாக உள்ளன.

ஓய்வு பெறுபவர்களின் விகிதத்திற்கு ஏற்ப, பணியாளர்கள் நியமிக்கப்படாததே இதற்கு காரணம். மொத்தமுள்ள, 125 நகராட்சிகளில், 60 நகராட்சிகளில் கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளது. நகராட்சி கமிஷனர் பணியிடத்தை பொறுத்தவரை, நகராட்சி ஊழியர் பதவி உயர்வு, நேரடி நியமனம், தலைமைச் செயலகத்தில் பணியாற்றியவர்களை நியமித்தல், பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து வரக்கூடிவர்கள் என, பல வகைகளில் நிரப்பப்படுகிறது.

இதில், நகராட்சிகளில் பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு மூலம் கமிஷனர் பணியிடத்தை வழங்கினால், நிர்வாகம் நல்ல முறையில் நடக்கும் என்கின்றனர் ஊழியர்கள்.

பணி பாதிப்பு : மாநகராட்சிகளிலும் பணியாளர் பற்றாக்குறை தொடர்கிறது. மதுரை மாநகராட்சியில் கமிஷனர் பணியிடம், நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் உள்ளது. இதனால், மாநகராட்சி பகுதிகளிலும், பணிகள் பாதிப்படைந்து வருகின்றன. புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர், தூத்துக்குடி போன்ற மாநகராட்சிகள், நகராட்சிகளாக இருந்தபோது இருந்த பணியிடத்தை கொண்டே இயங்கி வருகின்றன. அதிலும், காலிப் பணியிடங்கள் நிரப்பாத நிலையே நீடிக்கிறது.

நம்பிக்கை : பெரும்பாலும், நகராட்சிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அமைவதால், அவற்றின் பிரச்னைகள் பெரிதாக வெளிப்படுத்தப் படாமல் முடக்கி வைக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர், நகராட்சி ஊழியர்கள்.

பொது மக்களிடம் நேரடி தொடர்பில் உள்ள நகராட்சிகளில் குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு போன்ற பிரச்னைகள் தீர்க்கப்பட்டால் தான், ஆட்சியாளர்களுக்கு நற்பெயர் கிடைக்கும் என்பதை உணர்ந்து, நகராட்சி நிர்வாகத்தில் உரிய மாற்றங்களைச் செய்து, முதல்வர் புத்துயிர் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளனர், நகராட்சி பணியாளர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us