'ஆயிரம் கோடி' வருத்தம்; ஆறுதலுக்கு ஒரு விருது: ஜெகத்ரட்சகன் விவகாரத்தில் 'ஜெகஜ்ஜால' அரசியல்
'ஆயிரம் கோடி' வருத்தம்; ஆறுதலுக்கு ஒரு விருது: ஜெகத்ரட்சகன் விவகாரத்தில் 'ஜெகஜ்ஜால' அரசியல்
UPDATED : செப் 01, 2024 01:33 PM
ADDED : செப் 01, 2024 01:25 PM

சென்னை: அமலாக்கத்துறையின் ரெய்டு, ரூ.908 கோடி அபராதம், ரூ.89 கோடி சொத்து பறிமுதல் என சோகத்தில் இருந்த ஜெகத்ரட்சகனை குஷிப்படுத்தும் வகையில் தி.மு.க., தலைமை விருது அறிவித்துள்ளது.
தொடர் சர்ச்சை
தி.மு.க.வில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தொடர் சர்ச்சைகளில் சிக்கியவர் என்றால் ஜெகத்ரட்சகனை சொல்லலாம். மதுபான ஆலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என இவரது தொழில் சாம்ராஜ்ஜியத்தின் எல்லைகள் அதிகம். உள்ளூர், அண்டை மாநிலம் கடந்து அயல்நாடுகளிலும் இவரது தொழில் முதலீடுகளும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது உண்டு.
ரூ.908கோடி அபராதம்
கடந்த 2020ம் ஆண்டு ஜெகத்ரட்சகனுக்குச் சொந்த இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி காட்டியது. ரெய்டின் போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் சொத்து முடக்கம் என்று நடவடிக்கை வேறு திசையில் பயணிக்க, கடைசியில் அந்நியச் செலாவணி மேலாண் சட்ட மீறல் என்ற புள்ளியில் ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
அதிர்ச்சி
என்னது... அபராதம் மட்டுமே ரூ.908 கோடியா என்று தி.மு.க.,வில் மட்டுமல்ல, மற்ற கட்சியினரும் 'ஜெர்க்' ஆகித்தான் போயினர். அது மட்டுமின்றி 89 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் அமலாக்கத்துறை அறிவித்தது.
கட்சி தலைமைக்கு மிக நெருக்கமான ஜெகத்ரட்சகனுக்கு உள்ள சொத்து மதிப்பில் இதெல்லாம் தம்பிடி காசு என்று கருத்துகள் பரவலாக பேசப்பட்டன. ஆனால் ஜெகத்தின் தரப்பில் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை அளித்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
மனப்புழுக்கம்
இவ்வளவு தூரம் ரெய்டு, அபராதம் என தம்மைச் சுற்றி நடக்கும் அரசியல் நெருக்கடிகள், சவால்களை கட்சி தலைமை கண்டு கொள்ளவில்லை என்று ஜெகத்ரட்சகன் மனம் புழுங்கி வருத்தத்தில் உள்ளார் என ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். கட்சியில் வலுவானவர், பெரும் தொழிலதிபர் அவரின் நிலையே இப்படியா என்றும் பேச்சுகள் எழுந்ததாக தெரிகிறது.
விருது அறிவிப்பு
கட்சித் தலைமையின் பாராமுகம் காரணமாக, மிகுந்த மன வருத்தத்தில் இருந்தது குறித்து பல்வேறு கட்டங்களில் கட்சியின் மேலிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தி.மு.க., பவள விழா ஆண்டு முப்பெரும் விழாவை ஒட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளுக்கு தேர்வானவர்களின் பட்டியலில் ஜெகத்ரட்சகன் பெயரும் டிக் செய்யப்பட்டு உள்ளது.
கட்சி தலைமை
ஜெகத்ரட்சகனுக்கு கலைஞர் விருது வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அவரது மன வருத்தம் அறிந்து, ஆறுதல் தரும் வகையில் தலைமை இதை செய்திருப்பதாக கூறுகின்றனர், கட்சி பிரமுகர்கள்.
அரசியல் களம்
கட்சித்தலைமை ஆதரவாக உள்ளது என்பதை வெளிக்காட்டவும், என்ன சூழ்நிலையிலும் கட்சி துணை நிற்கும் என்பதை சொல்லாமல் சொல்லவும் தான் இந்த அறிவிப்பு என கட்சியின் பல்ஸ் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு விருது ஜெகத்தின் மன உளைச்சல், அதிருப்தி, சோகத்தை சரி செய்யுமா என்பதே தி.மு.க.,வினரின் முன் இருக்கும் கேள்வியாக உள்ளது.