'கடற்கரை மக்களுக்கான அங்கீகாரம்' - எழுத்தாளர் ஜோ. டி. குரூஸ் பெருமிதம்
'கடற்கரை மக்களுக்கான அங்கீகாரம்' - எழுத்தாளர் ஜோ. டி. குரூஸ் பெருமிதம்
ADDED : ஜன 28, 2024 01:08 AM

சென்னை: ''எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது, கடற்கரை மக்களுக்கான அங்கீகாரம்,'' என, எழுத்தாளர் ஜோ டி குரூஸ் தெரிவித்தார்.
'கொற்கை, ஆழிசூல் உலகு, அஸ்தினாபுரம், யாத்திரை' போன்ற புகழ் பெற்ற நாவல்களை எழுதியவர் ஜோ டி குரூஸ். கொற்கை நாவலுக்காக 2013ல், 'சாகித்ய அகாடமி' விருது பெற்றவர். தற்போது, பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
பத்மஸ்ரீ விருதை எதிர்பார்த்தீர்களா?
நினைத்துக்கூட பார்க்கவில்லை. தற்போது என் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் உவரிக்கு வந்திருக்கிறேன். நண்பர்களின் வாழ்த்துச் செய்தி வாயிலாகவே, விருது கிடைத்ததை அறிந்தேன். செய்தி கேட்டதும் நமக்கு பத்மஸ்ரீ விருதா என்று அதிர்ச்சியாக இருந்தது.
இதை கடற்கரை மக்களுக்கான ஓர் அங்கீகார மாகவே பார்க்கிறேன். கடலோர மக்களையும் அரசு திரும்பிப் பார்க்கிறது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்தப் பணியிலிருந்தாலும் சில நேரங்களில் சோர்வு தட்டும். அந்த சோர்விலிருந்து விடுபட்டு, இன்னும் வேகமாக செயல்பட, இந்த விருது பெரும்ஊக்கமாக இருக்கும்.
'கொற்கை, ஆழிசூல் உலகு' என, உங்கள் படைப்புகள் அனைத்தும் கடற்கரை மக்களின் வாழ்வியல் பற்றி மட்டும் பேசுகிறதே?
நான் கடற்கரையில் பிறந்து வளர்ந்தவன். எனக்கு அது மட்டுமே தெரியும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என, ஐவகை நிலங்களிலும் விதவிதமாக வாழ்க்கை அமைப்பு, பொருளாதாரச் சூழல்கள் மற்றும் சிக்கல்கள் உள்ளன.
இவை அனைத்தும் அரசுக்கு தெரியும் என்று சொல்ல முடியாது. எனவே, படைப்புகள் வாயிலாக அரசுக்கு கொண்டுச் செல்வது, என் கடமை என்று நினைக்கிறேன்.
உங்களின் அடுத்த படைப்பு?
கிடைக்கும் தகவல்களை வைத்து நாவல், சிறுகதை எழுதி விட வேண்டும் என, நான் நினைப்பதில்லை. அந்தந்த நேரத்தில் தோன்றினால், நாவலாக எழுதுகிறேன்.
நாவல் எழுதினால் அதற்குள் உள்ள நுாற்றுக்கணக்கான கதாபாத்திரங்களுடன் வாழ வேண்டும். அப்படி தோன்றும் போது அடுத்த படைப்பு வரும். மக்களுக்கான நீதி கிடைக்கும் வரை இலக்கியம் வாயிலாக, அரசின் கவனத்தை ஈர்த்துக் கொண்டே இருப்பேன்.
மக்களுக்கான நீதி கிடைக்கவில்லை என்கிறீர்களா?
நமக்கான அரசு என சாதாரண மக்கள் இன்னும் நினைக்கவில்லை. வறுமையின் பிடியில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக விடுபடவில்லை.
இவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்த பின்னும் துல்லியமாக வானிலையை கணிக்கும் கருவிகள் அரசிடம் இல்லை என்பது, சமீபத்திய சென்னை, தென் மாவட்ட பெரு வெள்ளத்தில் தெரிந்து விட்டது.
ஓட்டு வங்கி அரசியலை மையமாக வைத்தே, இங்கு அனைத்தும் நடக்கக் கூடாது என நினைக்கிறேன். குறுகிய கால நலன்களை மனதில் கொள்ளாமல், எதிர்காலத்தை மனதில் கொண்டே திட்டங்களை, அரசு செயல்படுத்த வேண்டும். அதுவே மக்களுக்கான நீதி. அது இன்னும் கிடைக்கவில்லை.
கடந்த 2014-ல் நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும் என குரல் கொடுத்தீர்கள். வரும் தேர்தலில் அரசியல் நிலைப்பாடு எடுக்க வாய்ப்புள்ளதா?
என் கடற்கரையோர மக்களுக்கு, யார் சேவை செய்ய தயாராக இருக்கின்றனரோ, அவர்களை ஆதரிப்பது தான், என் அரசியல் நிலைப்பாடு. சித்தாந்தங்களை பிடித்துக் கொண்டு நான் தொங்குவதில்லை.
எங்கள் கடற்கரை மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஒளி கிடைக்கக்கூடிய அளவுக்கு அரசியல் தீர்வுகளை முன்வைப்பவர்களை ஆதரிக்கிறேன்; மக்களும் ஆதரிப்பர். நாங்கள் ஆதரிப்பவர்களுக்கு சித்தாந்தம் இருக்கலாம். அது பற்றி கவலை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
'
பரத கலைஞர்களுக்கு என் விருது சமர்ப்பணம்'
இந்தாண்டுக்கான பத்ம விபூஷண் விருது, பழம்பெரும் பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''நான், அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டையில் பங்கேற்று தமிழகம் திரும்பியதும், இந்த செய்தி கிடைத்துள்ளது. இது, ராமரின் அனுகிரகமாகவே கருதுகிறேன். இந்த விருதை ஒட்டுமொத்த பரத கலைஞர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்,'' என்றார்.

