மின் வாரியத்துக்கு ரூ.850 கோடி கடன் வழங்குகிறது ஆர்.இ.சி.,: அசாத்திய துணிச்சல்
மின் வாரியத்துக்கு ரூ.850 கோடி கடன் வழங்குகிறது ஆர்.இ.சி.,: அசாத்திய துணிச்சல்
ADDED : அக் 23, 2025 12:09 AM

சென்னை: புதிய துணைமின் நிலையங்கள் அமைக்க, மின் வாரியத்துக்கு, 850 கோடி ரூபாய் கடன் வழங்க, ஆர்.இ.சி., நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
தனியாரிடம் இருந்து, அதிக மின்சாரம் கொள்முதல் செய்தல், புதிய மின் திட்டங்களை குறித்த காலத்தில் செயல்படுத்தாததால் வட்டி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், தமிழக மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது.
இதனால், புதிய மின் நிலையம், துணைமின் நிலையம் உள்ளிட்ட மின் திட்டங்களை செயல்படுத்த போதிய நிதி இல்லாமல் சிரமப்படுகிறது.
எனவே, மின் திட்டங்களுக்கும், நடைமுறை மூலதன செலவுகளை சமாளிக்கவும், மத்திய அரசின் ஆர்.இ.சி., - பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன், அரசு மற்றும் தனியார் வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கப்படுகிறது.
தற்போது, மின் வாரியத்திற்கு, 1.75 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இந்த சூழலில், மாநிலம் முழுதும் சீராக மின் வினியோகம் செய்ய, 110 கிலோ வோல்ட் திறனில், 54 துணைமின் நிலையங்களை, மின் வாரியத்தின் துணை நிறுவனமான, மின் தொடரமைப்பு கழகம் அமைக்க உள்ளது .
இதற்காக, ஆர்.இ.சி., நிறுவனத்திடம், மின் வாரியம் 850 கோடி ரூபாய் கடன் கேட்டது. இந்த கடனை வழங்க, தற்போது, ஆர்.இ.சி., ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு, 9.25 சதவீத ம் ஆண்டு வட்டி. எனவே, துணைமின் நிலையங் கள் அமைக்கும் பணியை விரைவில் துவங்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.