நிம்மதி பெருமூச்சு விடுங்க மக்களே... 4 மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ்
நிம்மதி பெருமூச்சு விடுங்க மக்களே... 4 மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ்
ADDED : நவ 27, 2024 09:54 PM

சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட அதிகனமழைக்கான ரெட் அலர்ட் உத்தரவை சென்னை வானிலை ஆய்வு மையம் வாபஸ் பெற்றுள்ளது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், சென்னையில் இருந்து தெற்கு - தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று புயலாக வலுப்பெறும். அடுத்த இரு தினங்களில் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும். இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
குறிப்பாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (நவ.,28) அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, நவ.,29,30ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைவதில் தாமதமான நிலையில், மணிக்கு 3 கி.மீ., வேகத்தில் மிக மெதுவாக நகர்கிறது. இதனால், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய 4 மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

