விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைப்பு: சாதாரண பயணியர் பாதிப்பு
விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைப்பு: சாதாரண பயணியர் பாதிப்பு
ADDED : மே 31, 2025 04:40 AM

சென்னை: விரைவு ரயில்களில், 'ஸ்லீப்பர்' பெட்டிகள் குறைக்கப்பட்டு, 'ஏசி' பெட்டிகள் அதிகரித்து இயக்கப்படுவதால், கூடுதல் கட்டணம் கொடுத்து மக்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
விரைவு ரயில்களில், குறைந்த கட்டணத்தில், 'ஏசி' பெட்டியில் பயணிக்கும் வகையில், மூன்றாம் வகுப்பு, 'ஏசி' பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகின்றன.
இந்த வகை பெட்டிகள், தற்போது ரயில்களில் கூடுதலாக இணைத்து இயக்கப்படுகின்றன. இதனால், தற்போது, ரயில்களில் 'ஸ்லீப்பர்' எனப்படும் படுக்கை வசதி உடைய பெட்டிகளை நீக்கிவிட்டு, மூன்றாம் வகுப்பு, 'ஏசி' பெட்டிகள் இணைத்து இயக்கும் நடவடிக்கையில் ரயில்வே ஈடுபட்டு வருகிறது.
தெற்கு ரயில்வேயில், சென்ட்ரல் - கோவை, திருவனந்தபுரம் விரைவு ரயில்களில் தலா 2; சென்னை - மங்களூரு, மேட்டுப்பாளையம் - நீலகிரி, திருச்சி - ஹவுரா விரைவு ரயில்களில் தலா ஒன்று; சென்னை - திருநெல்வேலி, சென்னை - செங்கோட்டை ரயில்களில் தலா ஒன்று; நாகர்கோவில் - மும்பை; கன்னியாகுமரி - புதுடில்லி விரைவு ரயில்களில், தலா ஒரு ஸ்லீப்பர் பெட்டி நீக்கப்பட்டு, மூன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு, 'ஏசி' பெட்டிகள், அடுத்த மாதம் இறுதி முதல் இணைத்து இயக்கப்பட உள்ளன.
ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்படுவதால், மக்கள், 'ஏசி' பெட்டியில், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்க தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது:
விரைவு ரயில்களில், கூடுதல் பெட்டிகளை இணைப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், ஏற்கனவே உள்ள ஸ்லீப்பர் பெட்டிகளை நீக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், விரைவு ரயில்களில், 22 பெட்டிகள் வரை மட்டும், தற்போது இணைத்து இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களில் கூடுதல், 'ஏசி' பெட்டிகளை இணைத்து இயக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்லீப்பர் பெட்டிகளை நீக்கும் முடிவை, தெற்கு ரயில்வே கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து ரயில் பயணியர் சிலர் கூறியதாவது:
ஆரம்பத்தில் ரயிலில் ஓரிரு ஸ்லீப்பர் பெட்டிகளை மட்டும் நீக்கி, 'ஏசி' பெட்டிகளை இணைத்தனர். தற்போது, மூன்று ஸ்லீப்பர் பெட்டிகள் வரை நீக்கப்படுகின்றன. 'ஏசி' பெட்டிகளில் கட்டணம் அதிகம் என்பதால், வருவாய் பெருக்கும் நோக்கில், ஸ்லீப்பர் பெட்டிகளை நீக்கிவிட்டு, 'ஏசி' பெட்டிகளை ரயில்வே நிர்வாகம் இணைத்து வருகிறது.
திடீரென இவ்வாறு பெட்டிகளை குறைப்பதால், ஸ்லீப்பரில் முன்பதிவு செய்து காத்திருப்போருக்கு, டிக்கெட் உறுதியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது தொடருமானால், சாதாரண மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவர். எனவே, ஸ்லீப்பர் பெட்டிகள் குறைப்பை, ரயில்வே கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.