சென்னை - புதுச்சேரி உட்பட 10 ரயில்களில் பெட்டிகள் குறைப்பு
சென்னை - புதுச்சேரி உட்பட 10 ரயில்களில் பெட்டிகள் குறைப்பு
ADDED : டிச 21, 2024 07:55 PM
சென்னை:'சென்னை - புதுச்சேரி உட்பட 10 மெமு ரயில்களில், தலா 2 பெட்டிகள் குறைக்கப்படும்' என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே அறிக்கை:
உத்தர பிரதேச மாநிலத்தில், மகா கும்பமேளா நடைபெற உள்ளதால், கூடுதல் ரயில்கள், ரயில் பெட்டிகள் தேவைப்படுகின்றன.
இதனால், குறுகிய துாரத்திற்கு இயக்கப்படும், 'மெமு' வகை ரயில்களில், பெட்டிகளை தற்காலிகமாக குறைத்து இயக்கப்பட உள்ளன. அதன்படி, 10 பயணியர் ரயில்களில் தற்போதுள்ள 12 பெட்டிகளில் இருந்து, தலா 2 பெட்டிகள் குறைக்கப்படும்.
எழும்பூர் - புதுச்சேரி ரயிலில் நேற்று முதலும், புதுச்சேரி - திருப்பதி, திருப்பதி - புதுச்சேரி, புதுச்சேரி - எழும்பூர் ரயில்களில் நாளை முதலும், தாம்பரம் - விழுப்புரம், விழுப்புரம் - தாம்பரம், கடற்கரை - விழுப்புரம், திருவண்ணாமலை - தாம்பரம் உள்ளிட்ட ரயில்களில், 26ம் தேதி முதலும் பெட்டிகள் குறைத்து இயக்கப்படும்.
அடுத்த அறிவிப்பு வரும் வரை, இது தொடரும்.
விழுப்புரம் - கடற்கரை பயணியர் ரயில், வரும் 26ம் தேதி முதல் தாம்பரம் அடுத்து கிண்டி, மாம்பலம், எழும்பூரில் மட்டுமே நிற்கும்; பூங்கா நகர், கோட்டை நிலையங்களில் நிற்காது
திருவண்ணாமலை - தாம்பரம் பயணியர் ரயில், வரும் 27ம் தேதி முதல் விரைவு பாதையில் இயக்குவதால், எழும்பூர், மாம்பலம், கிண்டியில் மட்டுமே நின்று செல்லும்; பூங்காநகர், கோட்டை நிலையங்களில் நிற்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.