பணி ஒப்பந்த காலம் குறைப்பு: அரசுசாரா டாக்டர்கள் விடுவிப்பு
பணி ஒப்பந்த காலம் குறைப்பு: அரசுசாரா டாக்டர்கள் விடுவிப்பு
ADDED : நவ 21, 2024 09:35 PM
சென்னை:அரசு சாரா டாக்டர்களின் ஒப்பந்த காலம், இரண்டாண்டில் இருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து, 2023ல் பணியமர்த்தப்பட்ட நபர்களை விடுக்க, மருத்துவ ஊரக நலப்பணிகள் துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு மருத்துவ கல்லுாரிகளில், இரண்டு ஒதுக்கீட்டின் கீழ், எம்.டி., - எம்.எஸ்., போன்ற முதுநிலை படிப்பு இடங்கள் நிரப்பப்படுகின்றன.
அதன்படி, முதுநிலை படிப்பில், 50 சதவீதம் எம்.பி.பி.எஸ்., முடித்து அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
இவர்கள், முதுநிலை மருத்துவ படிப்பை முடித்த பின், ஓய்வு பெறும் வரை, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மற்ற, 50 சதவீத இடங்களில், பொது கவுன்சிலிங் அடிப்படையில், அரசு சாரா டாக்டர்கள் சேர்கின்றனர். இவர்கள், முதுநிலை மருத்துவ படிப்பை முடித்த பின், மாவட்டம் அல்லது வட்டார மருத்துவமனைகளில் இரண்டாண்டு பணியாற்றுவது கட்டாயம்.
இந்த ஒப்பந்த பணிக்காலத்தை குறைக்க வேண்டும் என, முதுநிலை மருத்துவ மாணவர்கள் கோரி வந்தனர். அதன்படி, ஒப்பந்த காலத்தை குறைத்து, கடந்தாண்டு மக்கள் நல்வாழ்வு துறை அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், மருத்துவ ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் ராஜமூர்த்தி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசுசாரா டாக்டர்களின் ஒப்பந்தப் பணிக்காலம் ஓராண்டு முடிந்திருந்தால், அவர்களை விடுவிக்க வேண்டும்.
'குறிப்பாக, 2023ம் ஆண்டில் சேர்ந்த டாக்டர்களை, பொது சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.
இதை முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் வரவேற்றுள்ளனர்.