ADDED : பிப் 26, 2024 02:01 AM

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற இணையதளம் மறுவடிவமைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை முதல் புதுப்பொலிவுடன் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் நிலை, உத்தரவுகள், தீர்ப்புகள் பற்றிய வெளிப்படையான தகவல்களை, www.hcmadras.tn.nic.in என்ற, சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக, வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகள் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள, www.hcmadras.tn.nic.in என்ற இணையதள முகவரி, www.hcmadras.tn.gov.in என்று மாற்றப்பட்டு உள்ளது.
இணையதள பக்கத்தில் இடம் பெற்றிருந்த பல்வேறு தகவல்கள், புதுப்பொலிவுடன் மறுவடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த மாற்றத்திற்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்து உள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் மறு வடிவமைப்பு செய்யப்பட்டு, பிப்., 23 முதல் அமலுக்கு வந்துள்ளன என, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

