சொத்து குவிப்பு வழக்கிலிருந்து தி.மு.க., மாஜியை விடுவிக்க மறுப்பு
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து தி.மு.க., மாஜியை விடுவிக்க மறுப்பு
ADDED : செப் 23, 2026 06:32 AM

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, தி.மு.க..,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில், 2006- - 2011ம் ஆண்டுகளில், சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். இவர் வருமானத்துக்கு அதிகமாக, 3.80 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு துறை, கடந்த 2011ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரது மனைவி செந்தமிழ்செல்வி, மகன் கதிரவன் ஆகியோர் மீதான வழக்கை விசாரித்த, கடலுார் நீதிமன்றம், 2016ம் ஆண்டு பிப்., 3ல், மூன்று பேரையும் வழக்கில்இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தரப்பில், மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த கடலுார் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்க மறுத்து, அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
விசாரணையை கடலுார் நீதிமன்றத்தில் இருந்து மாற்றக் கோரிய மனுவை, தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
