ADDED : ஜன 22, 2026 02:04 AM
சென்னை: கரூரில், 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணையில் உள்ள, கரூர் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
கரூரில் கடந்தாண்டு செப்., 27ல், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர்களின் விசாரணையில், கரூர் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உள்ளார்.
அவர் மீது, த.வெ.க., தரப்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன.
அதுதொடர்பாக, மணிவண்ணனிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் ஐந்து முறை விசாரணை நடத்தி உள்ளனர். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வர வேண்டும் என்றும், அவருக்கு உத்தர விட்டுள்ளனர்.
இந்நிலையில், காத்திருப்போர் பட்டியலுக்கு மணிவண்ணன் மாற்றப்பட்டுள்ளார்.
அவருடன், 58 இன்ஸ்பெக்டர்களும், புதுக்கோட்டை, கரூர், அரியலுார் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை, மத்திய மண்டல ஐ.ஜி., பாலகிருஷ்ணன் பிறப்பித்து உள்ளார்.

