தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் மீதான எப்.ஐ.ஆர்., ரத்து செய்ய மறுப்பு
தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் மீதான எப்.ஐ.ஆர்., ரத்து செய்ய மறுப்பு
ADDED : ஏப் 29, 2025 11:49 PM

புதுடில்லி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களான ரஹமத்துல்லா, ஜமாஸ் முகமது மீது, மத வெறுப்புகளை துாண்டும் வகையில் பேசியதாக, கர்நாடக மாநிலம் பெங்களூரு, தமிழகத்தின் மதுரை மற்றும் தஞ்சாவூர் என, மூன்று இடங்களில் எப்.ஐ.ஆர்.,கள் தாக்கல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தின் மதுரையில், 2022 மார்ச், 17ல் நடந்த பேரணியில், இவர்கள் இருவரும், பார்லிமென்ட் மீதான பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளியான பயங்கரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.
மேலும், உத்தர பிரதேசம் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதைத் தவிர, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்துள்ளனர். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அணியும் உடை குறித்தும் அவதுாறாக பேசியுள்ளனர்.
ஹிந்து, கிறிஸ்தவ மதத்தினர் மத நம்பிக்கைகளை கேலி, கிண்டல் செய்தும் பேசியுள்ளனர். இவர்கள் பேசியது அப்பட்டமான அவதுாறாகும்; கடுமையாக கண்டிக்கத்தக்கது மற்றும் வெறுப்பு பேச்சாகும்.
அதனால், இவர்கள் மீதான எப்.ஐ.ஆர்.,களை ரத்து செய்ய முடியாது. மதுரையில் நடந்த பேரணியில் பேசியதால், இந்த மூன்று மனுக்களையும் ஒருங்கிணைத்து, மதுரை நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

